பாகிஸ்தானுக்கு 369 ஓட்டங்களை இலக்காய் வைத்தது நியூசிலாந்து

First Published Nov 29, 2016, 12:22 PM IST
Highlights


ஹாமில்டன்,

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 369 ஓட்டங்கள் நிர்ணயித்தது நியூசிலாந்து.

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 271 ஓட்டங்களும், பாகிஸ்தான் அணி 216 ஓட்டங்களும் எடுத்தன.

55 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி மழையால் பாதிக்கப்பட்ட 3–வது நாள் ஆட்டம் முடிவில் ஒரு பந்தை மட்டும் எதிர்கொண்டு ஓட்டங்கள் கணக்கை தொடங்காமல் இருந்தது.

நேற்று 4–வது நாள் ஆட்டம் நடந்தது. ஜீத் ராவல், டாம் லாதம் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். ஜீத் ராவல் (2 ஓட்டங்கள்) முகமது அமிர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆகி நடையை கட்டினார்.

இதைத்தொடர்ந்து கேப்டன் கனே வில்லியம்சன், டாம் லாதமுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடியது. கனே வில்லியம்சன் 42 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் இம்ரான்கான் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து ராஸ் டெய்லர் களம் இறங்கினார். நிலைத்து நின்று ஆடிய டாம் லாதம் 80 ஓட்டங்களிலும், நிகோல்ஸ் 26 ஓட்டங்களிலும், காலின் டி கிராண்ட்ஹோம் 32 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் ராஸ் டெய்லர் நிலைத்து நின்று அபாரமாக ஆடினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிறப்பாக ஆடிய அவர் சதம் அடித்தார்.

78–வது டெஸ்டில் ஆடும் ராஸ் டெய்லர் அடித்த 16–வது சதம் இதுவாகும். ஹாமில்டன் மைதானத்தில் அவர் அடித்த 4–வது சதம் இது. இங்கு அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை ராஸ் டெய்லர் பெற்றுள்ளார். நியூசிலாந்து வீரர்களில் அதிக டெஸ்ட் சதம் அடித்த மார்ட்டின் குரோவ் (17 சதம்) சாதனையை சமன் செய்ய ராஸ் டெய்லர் இன்னும் ஒரு சதம் அடித்தால் போதும். கடந்த 11 இன்னிங்சில் அரை சதத்தை எட்டாத ராஸ் டெய்லர் இந்த சதத்தை பதிவு செய்து நல்ல பார்முக்கு திரும்பி இருக்கிறார்.

நியூசிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 85.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ராஸ் டெய்லர் 134 பந்துகளில் 16 பவுண்டரியுடன் 102 ஓட்டங்களும், வாட்லிங் 40 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 15 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் அணி தரப்பில் இம்ரான்கான் 3 விக்கெட்டும், முகமது அமிர், வஹாப் ரியாஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 369 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. கடினமான இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 1 ஓட்டம் எடுத்தது. சமி அஸ்லாம் 1 ஓட்டத்துடனும், பொறுப்பு கேப்டன் அசார் அலி ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. பாகிஸ்தான் அணி வெற்றி பெற மேலும் 368 ஓட்டங்கள் எடுக்க வேண்டும். இந்த போட்டியில் வலுவான நிலையில் இருக்கும் நியூசிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

tags
click me!