
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் அர்ஜென்டீனா அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இதற்கு முன்னர் 1981, 2006, 2008, 2011 ஆகிய ஆண்டுகளில் இறுதிச்சுற்றில் தோற்றிருந்த அர்ஜென்டீனா, இப்போது கடும் போராட்டத்துக்குப் பிறகு குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
இதன்மூலம் 116 ஆண்டுகால டேவிஸ் கோப்பை வரலாற்றில் டேவிஸ் கோப்பையை வென்ற 15-ஆவது அணி என்ற பெருமையை அர்ஜென்டீனா பெற்றுள்ளது.
குரோஷிய தலைநகர் ஜாக்ரெப் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இரு ஒற்றையர் ஆட்டம், இரட்டையர் ஆட்டம் ஆகியவற்றின் முடிவில் குரோஷியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் உலகின் 6-ஆம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்கொண்டார் அர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இந்த முதல் இரு செட்களை முறையே 6-7 (4), 2-6 என்ற கணக்கில் இழந்த டெல் போட்ரோ, அதன்பிறகு அபாரமாக ஆடி 7-5, 6-4, 6-3 என்ற கணக்கில் அடுத்த 3 செட்களை கைப்பற்றி சிலிச்சை தோற்கடித்தார். இதனால் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டின.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் அர்ஜென்டீனாவின் ஃபெடெரிக்கோ டெல்போனிஸ் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் இவோ கார்லோவிச்சை வீழ்த்த, ஆர்ஜென்டீனா சாம்பியன் ஆனது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.