
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பெயினின் ரஃபேல் நடாலும், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும் மோதுகின்றனர்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் நடாலும், கிரிகோர் டிமிட்ரோவும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் நடால் கைப்பற்ற, அடுத்த செட்டை 7-5 என்ற கணக்கில் கிரிகோர் கைப்பற்றினார்.
இதன்பிறகு டைபிரேக்கர் வரை சென்ற அடுத்த இரு செட்களில் ஒன்றை நடாலும், மற்றொன்றை கிரிகோரும் கைப்பற்ற, ஆட்டம் 5-ஆவது செட்டுக்கு நகர்ந்தது. 5-ஆவது செட்டின் 7-ஆவது கேமில் கிரிகோரின் சர்வீஸை முறியடிக்க நடால் முயற்சித்தார். அதில் ஒரு கட்டத்தில் 0-30 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கிய கிரிகோர், பின்னர் விடாப்பிடியாகப் போராடி தனது சர்வீஸை காப்பாற்றினார்.
இதையடுத்து 9-ஆவது கேமில் அபாரமாக ஆடிய நடால், அதில் கிரிகோரின் சர்வீஸை முறியடித்து 5-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். தொடர்ந்து 10-ஆவது கேமில் தனது சர்வீஸை தக்கவைத்த நடால், அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார்.
விறுவிறுப்பான கடைசி கேமின் இறுதி ஷாட்டை அடித்தபோது வெற்றிக் களிப்பில் அப்படியே ஆடுகளத்தில் சரிந்தார் நடால்.
ஆஸ்திரேலிய ஓபனில் 4-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் நடால். 2009-இல் முதல்முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற நடால், அதன்பிறகு 2012, 2014 ஆண்டுகளில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளின் இறுதிச்சுற்றில் முறையே செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா ஆகியோரிடம் தோல்வி கண்டார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 21-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் நடால். அடுத்ததாக ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை சந்திக்கிறார். இவர்கள் இருவரும் மோதவுள்ள 9-ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்று இது. இதற்கு முன்னர் 2014-இல் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் போட்டியின் இறுதிச் சுற்றில் இருவரும் மோதினர். அதில் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் மோதிய 8 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிச் சுற்றுகளில் நடால் 6 முறையும், ஃபெடரர் 2 முறையும் வெற்றி கண்டுள்ளனர். 2009 ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச் சுற்றில் ஃபெடரரை வீழ்த்தியே நடால் சாம்பியன் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு டென்னிஸ் உலகின் மிக முக்கியமான வீரர்களான நடால் - ஃபெடரர் மோதும் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றில் மோதவுள்ளனர். டென்னிஸ் உலகின் மிக முக்கியமான வீரர்களான நடால் - ஃபெடரர் மோதும் இறுதி ஆட்டத்தைக் காண உலகமே எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.