ஃபார்முக்கு வந்த ராகுல்.. முரளி விஜய் வேற லெவல் பேட்டிங்!! அபார சதமடித்து அசத்தல்.. வீடியோ

By karthikeyan VFirst Published Dec 1, 2018, 2:06 PM IST
Highlights

ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் முரளி விஜயும் ராகுலும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேட்டிங் ஆடியுள்ளனர். 
 

ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் முரளி விஜயும் ராகுலும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேட்டிங் ஆடியுள்ளனர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6ம் தேதி தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிராக இந்திய அணி பயிற்சி போட்டியில் ஆடியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ராகுலை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக பேட்டிங் ஆடினர். ராகுல் மட்டும் 3 ரன்களில் வெளியேற, பிரித்வி ஷா, கோலி, புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோர் அரைசதம் அடித்தனர். இந்திய அணி 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என தொடர்ந்து சொதப்பிவந்த ராகுல், பயிற்சி போட்டியிலும் சொதப்பியது இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய லெவன் அணி முதல் இன்னிங்ஸில் 544 ரன்களை குவித்தது. அந்த அணியின் பேட்டிங்கின்போது பிரித்வி ஷா காயமடைந்ததால் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

எனவே இரண்டாவது இன்னிங்ஸில் முரளி விஜயும் ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இங்கிலாந்து தொடரில் சோபிக்காத தனக்கு அதன்பிறகு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் மீண்டும் வாய்ப்புக்காக காத்திருந்த முரளி விஜய், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார். மிகவும் நிதானமாக தொடங்கி அரைசதம் அடித்தார். அதேபோல தொடர்ந்து சொதப்பிவந்த ராகுலும் சிறப்பாக ஆடி மீண்டும் ஃபார்முக்கு திரும்பி அரைசதம் அடித்தார். 62 ரன்கள் அடித்து ராகுல் ஆட்டமிழந்தார். ராகுல் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை என்றாலும் இந்த அரைசதம் அவருக்கு உத்வேகத்தை அளித்திருக்கும். 

அரைசதம் கடந்த பிறகு முரளி விஜய், வேறு லெவலில் ஆட ஆரம்பித்தார். 91 பந்துகளில் அரைசதம் அடித்த முரளி விஜய், அதன்பிறகு பவுண்டரியும் சிக்ஸருமாக பறக்கவிட்டார். அதிரடியாக ஆடிய முரளி விஜய், அடுத்த 27 பந்துகளில் சதத்தை எட்டினார். 16 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 132 பந்துகளில் 129 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அத்துடன் ஆட்டம் முடிந்ததால் போட்டி டிராவில் முடிந்தது. 

இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின்போது ஜாக் கார்டர் வீசிய 38வது ஓவரில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட அந்த ஓவரில் 26 ரன்களை குவித்தார். அந்த ஓவருக்கு முன்னதாக 74 ரன்களில் இருந்த முரளி விஜய், அந்த ஒரே ஓவரில் சதத்தை எட்டினார். 

பிரித்வி ஷா இல்லாத நிலையில், முரளி விஜய் மற்றும் ராகுலின் ஆட்டம் இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
 

click me!