
தொடர் தோல்வியிலிருந்து மீண்டெழுந்துள்ள மும்பை அணி, தொடர் வெற்றிகளை பதிவு செய்து, புள்ளி பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நடப்பு சாம்பியனான மும்பை அணிக்கு, இந்த ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக ஆரம்பமாகவில்லை. முதல் 8 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி கிட்டியதால், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. எஞ்சிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப்புடன் மோதிய மும்பை அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்பிறகு, கொல்கத்தாவுடன் தொடர்ச்சியாக ஆடிய இரண்டு போட்டிகளிலும் மும்பை அணி வெற்றி பெற்றது. அதிலும் நேற்றைய போட்டியில் 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மும்பை அணி.
மும்பையை போன்றே இக்கட்டான நிலையில் இருந்த டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் தோல்வியை தழுவி, பிளே ஆஃப் வாய்ப்பை நழுவவிட்டன. ஆனால் மும்பை அணி தொடர் தோல்வியிலிருந்து மீண்டு தொடர் வெற்றிகளை பதிவு செய்துவருகிறது. கொல்கத்தாவுக்கு எதிரான அபார வெற்றியால் புள்ளிகள் கடகடவென உயர்ந்து நான்காமிடத்திற்கு முன்னேறிவிட்டது மும்பை அணி.
இதுதான் மும்பை அணியின் உண்மை முகம். அபாரமான பேட்டிங், தொடர் தோல்வியிலிருந்து மீண்டு அபார வெற்றி ஆகியவை மும்பை அணியின் தோல்வியில் துவளாத மனவலிமையை காட்டுகின்றன. மும்பை அணி தோற்ற பெரும்பாலான போட்டிகளில் கடைசி ஓவர் வரை வந்து வெற்றியின் விளிம்பில் தோல்வியை சந்தித்தது.
இப்போது தொடர் வெற்றிகளை பதிவு செய்துவருகிறது. தற்போது மும்பையும் கொல்கத்தாவும் ஒரே மாதிரியான நிலையில் உள்ளன. ஆனால் நெட் ரன்ரேட்டில் கொல்கத்தா மைனஸில் உள்ளது. மும்பை அணியோ முதல் மூன்று இடங்களில் இருக்கும் அணிகளைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.
கொல்கத்தாவுக்கு எதிரான மும்பை அணியின் பேட்டிங் மற்றும் வெற்றியை பார்த்து எதிரணிகள் மிரண்டு போயுள்ளன. மும்பை அணி எப்போதுமே அபாயகரமானதுதான். அனைத்து காலக்கட்டத்திலும் வலுவான அணியாகவே திகழ்ந்துவரும் தோனி தலைமையிலான சென்னை அணியை இதுவரை அதிகமுறை வீழ்த்தியிருப்பது மும்பை மட்டும்தான்.
2013 மற்றும் 2015 ஆகிய இறுதி போட்டிகளில் சென்னை அணியை வீழ்த்தித்தான் மும்பை அணி கோப்பையை வென்றது. எனவே மும்பை அணி தற்போது வெகுண்டெழுந்திருப்பது, எதிரணிகளை கலங்கடித்துள்ளது. தோனி தலைமையிலான சென்னை அணியும் இதற்கு விதிவிலக்கல்ல.
மும்பை அணியின் எஞ்சிய மூன்று போட்டிகளில், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. இந்த மூன்றிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்குள் மும்பை நுழைந்துவிடும். பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டியில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகவே மும்பை திகழும். எனவே மும்பை அணியை பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய விடாமல், பஞ்சாப் அணி தடுக்க முயலும். என்ன நடக்கிறது என பார்ப்போம்..
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.