முன்னாள் வீரர்கள் ஏதாவது சொல்லிட்டா போதும்.. பதறி அடிச்சு ஓடிவந்து ஜால்ரா அடிக்கும் தேர்வுக்குழு தலைவர்!!

By karthikeyan VFirst Published Jan 14, 2019, 1:51 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்தார் ரிஷப் பண்ட். 
 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்தார் ரிஷப் பண்ட். 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். இதையடுத்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம்பெறவில்லை.

உலக கோப்பைக்கு முந்தைய வெளிநாட்டு ஒருநாள் தொடர்கள் இவை என்பதால் இந்த தொடரில் ஆடும் இந்திய அணி தான் உலக கோப்பைக்கான முன்னோட்ட அணியாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உலக கோப்பையை மனதில் வைத்து இந்த தொடர்களுக்கு அணி தேர்வு செய்யப்பட்டிருக்கும் என்பதால், இந்த தொடர்களில் இடம்பெறாத வீரர்களுக்கு உலக கோப்பையில் இடம் கிடைக்காது என்று கருதப்பட்டது. அந்த வகையில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் இடம்பெறாததால், அவர் உலக கோப்பையில் ஆட வாய்ப்பில்லை என கருதப்பட்டது.

ஒருசில ஓவர்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்ற வல்ல ரிஷப் பண்ட்டை ஒருநாள் அணியிலும் எடுக்க வேண்டும். அவர் ஒரு சாம்பியன், அவரை உலக கோப்பையில் ஆடவைக்க வேண்டும் என்று கங்குலி வலியுறுத்தியிருந்தார். இதே கருத்தை அனில் கும்ப்ளேவும் தெரிவித்திருந்தார். ரிஷப் பண்ட்டிற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் ஓய்வளிக்கப்பட்டிருப்பதாகவும் உலக கோப்பையில் அவர் ஆடுவார் என்றும் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்திருந்தார்.

ஹர்பஜன் சிங்கும் கங்குலியை போலவே ரிஷப் பண்ட்டை ஒருநாள் அணியில் எடுத்து உலக கோப்பையில் ஆடவைக்க வேண்டும் என்றும் அவர் ஒரு சாம்பியன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள எம்.எஸ்.கே.பிரசாத், ரிஷப் பண்ட் ஒரு சாம்பியன் என்றும் உலக கோப்பையில் கண்டிப்பாக இடம்பெறுவார் என்றும் தெரிவித்துள்ளார். பெரியளவில் கிரிக்கெட் ஆடிய அனுபவம் இல்லாத எம்.எஸ்.கே.பிரசாத் தேர்வுக்குழு தலைவராக உள்ளார். அணி தேர்வு குறித்து பலமுறை விமர்சனங்களை சந்தித்துள்ளார். பெயரளவில்தான் அவர் தேர்வுக்குழு தலைவராக இருக்கிறார், ஆனால் அணி தேர்வு எல்லாம் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான் செய்கிறார்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது. அதனால் முன்னாள் வீரர்கள் ஏதேனும் கருத்து தெரிவித்தால், தனது இருப்பை பதிவு செய்யும் பொருட்டு, அவ்வப்போது எம்.எஸ்.கே.பிரசாத் அதே கருத்துடன் உடன்பட்டு கருத்து தெரிவிப்பது வழக்கம். அப்படித்தான் இப்போதும் வந்து ரிஷப் பண்ட் சாம்பியன் என்று கூறியுள்ளார்.

click me!