ஸ்ரீராம் கேபிடல் TNPL 2026 தொடரின் 19-வது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (CSG) மற்றும் சீசம் மதுரை பாந்தர்ஸ் (MP) அணிகள் மோதின. நாணய சுழற்சியில் (Toss) வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்டர்கள் மதுரை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். தொடக்க வீரர் மோகித் ஹரிஹரன் வெறும் 50 பந்துகளில் 108 ரன்கள் விளாசி அசுரத்தனமான சதத்தை பதிவு செய்தார். அவருக்கு பக்கபலமாக ஆடிய ஜெகதீசன் 48 பந்துகளில் 79 ரன்களும், இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய ஸ்வப்னில் 21 பந்துகளில் 42* ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் சேப்பாக் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 240 ரன்கள் குவித்தது. மதுரை அணி சார்பில் ஜி. பெரியசாமி 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 241 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ஹரி ராகவேந்திரா அபாரமான தொடக்கத்தை அளித்தார். அவர் 55 பந்துகளில் 98 ரன்கள் குவித்து சதத்தை நூலிழையில் தவறவிட்டாலும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல கடுமையாக போராடினார். அவருக்கு ஆதரவாக ராம் குமார் 12 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். எனினும், சேப்பாக் அணியின் கட்டுப்பாடான பந்துவீச்சால் மதுரை அணியால் இலக்கை எட்ட முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஸ்வப்னில் (2-17) மற்றும் பிரேம் குமார் (2-28) சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.