கோலியை வெறுப்பேத்தி வெற்றி கண்டது அந்த ஆஸ்திரேலிய பவுலர் மட்டும்தான்!! யாருனு தெரியுமா..?

By karthikeyan VFirst Published Dec 4, 2018, 12:57 PM IST
Highlights

கோலியை வம்பு இழுக்க வேண்டாம் என்று ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யலாம் என்பதே முன்னாள் கேப்டன் பாண்டிங்கின் திட்டவட்டமான கருத்து. 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை வீணாக வெறுப்பேற்றி வாங்கிக்கட்டி கொள்ள வேண்டாம் பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், கோலியை வெறுப்பேற்றி வெற்றி கண்ட ஆஸ்திரேலிய பவுலர் யார் என்பதை பார்ப்போம்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் இரு அணிகளுக்குமே முக்கியமான தொடர். ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தொடர் தோல்விகளை தழுவிவரும் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்று உத்வேகத்தை பெறும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தாலும் வெளிநாடுகளில் தொடர் தோல்விகளை தழுவிவரும் இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில அந்த அணியை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. மேலும் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைக்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 

இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக திகழும் விராட் கோலியை வீழ்த்த ஆஸ்திரேலிய அணி பல வியூகங்களை வகுத்துவருகிறது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு ஆஸ்திரேலிய மக்கள் மற்றும் ரசிகர்களின் நம்பிக்கையை பெறும் நோக்கில் முன்புபோல் அந்த அணி ஸ்லெட்ஜிங் செய்வதில்லை. ஆஸ்திரேலிய அணியின் அணுகுமுறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

எனினும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஸ்லெட்ஜிங் சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கோலியை வம்பு இழுக்க வேண்டாம் என்று ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யலாம் என்பதே முன்னாள் கேப்டன் பாண்டிங்கின் கருத்தாக உள்ளது. 

இதுகுறித்து பேசிய பாண்டிங், விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்ய வேண்டாம் என்று நான் கூறமாட்டேன். ஆனால் எப்போது ஸ்லெட்ஜிங் செய்கிறோம் என்பதுதான் முக்கியம். விராட் கோலியை ரன் அடிக்க விடாமல் தொடக்கம் முதலே கட்டுப்படுத்த வேண்டும். ரன்களை சேர்க்க அவரை போராட வைக்க வேண்டும். அவருக்கு எதிராக நாம் ஏதோ செய்கிறோம் என்பதை அவரை உணரவைக்க வேண்டும். அதன்பிறகு சில வார்த்தைகளை உதிர்த்து ஸ்லெட்ஜிங் செய்தால் கோலி நிலைகுலைவார். இதேபோல மிட்செல் ஜான்சன், கோலியை வெறுப்பேற்றி சில முறை வெற்றி கண்டிருக்கிறார் என்பதையும் பாண்டிங் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஸ்லெட்ஜிங் செய்வதில் ஆஸ்திரேலியர்கள் வல்லவர்கள் என்றால், அவர்களில் வல்லவர் மிட்செல் ஜான்சன். ஆஸ்திரேலிய அணிக்காக ஆடினாலும் சரி, ஐபிஎல்லில் ஆடினாலும் சரி, பேட்ஸ்மேனை சீண்டி வம்பிழுத்து விக்கெட்டை வீழ்த்த முனைவார் ஜான்சன். கோலியை வம்பிழுத்து அவரது விக்கெட்டை வீழ்த்தி வெற்றி கண்டவராக அவரைத்தான் குறிப்பிட்டுள்ளார் பாண்டிங்.

கோலியை ஸ்லெட்ஜிங் செய்தால் அதன்மூலம் உத்வேகம் பெற்று கூடுதல் ஆக்ரோஷத்துடன் ரன்களை குவிப்பார் என்று மற்ற முன்னாள் வீரர்கள் பயந்து பேசிய நிலையில், கோலியை ஸ்லெட்ஜிங் செய்யுங்கள் என்று பாண்டிங் அதிரடியாகவே கூறியுள்ளார். 
 

click me!