அவங்க 2 பேரோட பவுலிங்க அடிக்க முடியல.. அதனால் அவரு ஒருத்தர மட்டும் டார்கெட் பண்ணி அடிச்சேன்!! மேக்ஸ்வெல் ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Feb 25, 2019, 10:49 AM IST
Highlights

இந்த போட்டியில் மேக்ஸ்வெல்லின் இன்னிங்ஸ்தான் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. 43 பந்துகளில் 56 ரன்களை அடித்து அந்த அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார் மேக்ஸ்வெல். 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, வெறும் 126 ரன்களை மட்டுமே எடுத்தது. 127 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 5 ரன்களுக்கு உள்ளாக இரண்டு விக்கெட்டுகளை இழந்தபோதிலும் மேக்ஸ்வெல்லும் ஷார்ட்டும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். 

அரைசதம் அடித்த மேக்ஸ்வெல் ஆட்டமிழந்ததும், ஷார்ட்டும் ரன் அவுட்டாகி வெளியேற, ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. அதன்பிறகு மளமளவென விக்கெட்டுகளை சரித்த இந்திய பவுலர்கள், ரன்கள் வழங்காமல் கட்டுக்கோப்பாக வீசினர். கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட, 19வது ஓவரை வீசிய பும்ரா, அந்த ஓவரில் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். எனினும் பும்ராவின் அபாரமான உழைப்பை கடைசி ஓவரில் வீணாக்கினார் உமேஷ் யாதவ். கடைசி ஓவரில் 14 ரன்களை வாரி வழங்கினார் உமேஷ். இதையடுத்து கடைசி பந்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் மேக்ஸ்வெல்லின் இன்னிங்ஸ்தான் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. 43 பந்துகளில் 56 ரன்களை அடித்து அந்த அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார் மேக்ஸ்வெல். 

இந்நிலையில் இந்த போட்டி குறித்தும் தனது பேட்டிங் குறித்தும் பேசிய மேக்ஸ்வெல், எப்படி ஜெயித்தாலும் வெற்றி வெற்றிதான். மிடில் ஓவர்களில் கட்டுப்பாட்டோடு ஆட வேண்டும் என்று நினைத்தேன். டார்ஷி ஷார்ட்டுடன் நான் அமைத்தது நல்ல பார்ட்னர்ஷிப். நல்ல வேளையாக நாங்கள் விரைவில் விக்கெட்டை இழக்கவில்லை. டி20 போட்டியில் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்வது எனக்கு வசதியானது என்றார். 

மேலும் பும்ரா மற்றும் குருணல் பாண்டியாவின் பவுலிங் ஆடுவதற்கு மிகவும் கடினமாக இருந்தது. அவர்கள் இருவரும் அபாரமாக வீசினர். எனவே மிடில் ஓவர்களில் குருணல் பாண்டியாவின் பந்தை அடித்து ஆடமுடியாததால், சாஹலின் பவுலிங்கை அடித்து ஆடினேன். ஆனால் சிக்ஸர் அடிக்க நினைத்து, அந்த ஷாட் சரியாக ஆடாததால் விக்கெட்டை இழந்தேன் என்று மேக்ஸ்வெல் தெரிவித்தார். 
 

click me!