ஆஸ்திரேலிய வீரர்கள் அவருகிட்ட இருந்து கத்துக்கங்க!! இந்திய வீரருக்கு ரசிகரான ஆஸி., லெஜண்ட்

By karthikeyan VFirst Published Jan 25, 2019, 1:47 PM IST
Highlights

சொந்த மண்ணில் இந்தியாவிடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்து வரலாற்று படுதோல்வியை சந்தித்தது.

கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் எல்லா காலக்கட்டத்திலும் வெற்றிகரமான அணியாகவே திகழ்ந்து வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, கடந்த ஓராண்டாக கடும் சோதனைகளையும் சரிவையும் சந்தித்துள்ளது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வி, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர், பான்கிராஃப்ட் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தடை, இங்கிலாந்திடம் 5-0 என ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது, பாகிஸ்தானிடம் டெஸ்ட் தொடர் தோல்வி, சொந்த மண்ணில் இந்தியாவிடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்தது என கடந்த ஆண்டில் தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளது அந்த அணி. 

தற்போதைய ஆஸ்திரேலிய அணி அனுபவமில்லாத அணியாக இருப்பதும் அதற்கு ஒரு காரணம். அதுமட்டுமல்லாமல் மனதளவில் நம்பிக்கையிழந்து சோர்ந்து போயுள்ளது அந்த அணி. சொந்த மண்ணில் இந்தியாவிடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்து வரலாற்று படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுக்கும் இடையேயான மிகப்பெரிய வித்தியாசமாக அமைந்தது புஜாராவின் பேட்டிங் தான். 4 போட்டிகளில் 3 சதமடித்த புஜாரா, 521 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார். இக்கட்டான சூழல்களில் புஜாராவின் உறுதியான பேட்டிங், இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து வெற்றியடைய செய்யும். அடிலெய்டு டெஸ்டில் அவர் அடித்த 123 ரன்கள் அபாரமானது. 

தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் புஜாராவை போன்ற தடுப்பாட்ட வீரர் இல்லை. புஜாராவை பார்த்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்ற கருத்தை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹைடன், புஜாரா பேட்டிங் ஆடும் விதத்தை நான் மிகவும் ரசிக்கிறேன். புஜாரா அருமையாக ஆடுகிறார். இவர் ஆடும் மாதிரியான ஆட்டம், ஆலன் பார்டர் காலத்துடன் ஆஸ்திரேலியாவில் நிறவடைந்துவிட்டது. எங்கள் காலத்து வீரர்கள் தடுப்பாட்டம் ஆடுவார்கள் என்றாலும் பெரும்பாலும் அட்டாக் செய்தே ஆடுவார்கள் என்று தெரிவித்த ஹைடன், தற்போதைய ஆஸ்திரேலிய வீரர்கள் புஜாராவிடமிருந்து தடுப்பாட்டத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 
 

click me!