
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நடாலிடம் தோற்றிருந்தாலும்கூட மகிழ்ச்சியாகத்தான் இருந்திருப்பேன் என்று வெற்றிப் பெற்ற ஃபெடரர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் 18-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார் ஃபெடரர். தலைசிறந்த வீரரான ஃபெடரர், இன்றளவிலும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
மெல்போர்னில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரர் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை தோற்கடித்தார்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த இறுதி ஆட்டத்தில் முதல் 4 செட்களை இருவரும் மாறி மாறி கைப்பற்ற, ஆட்டம் 5-ஆவது செட்டுக்கு நகர்ந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த செட்டின் முதல் கேமிலேயே நடாலிடம் சர்வீஸை இழந்தார் ஃபெடரர்.
இதனால் 5 கேம்களின் முடிவில் நடால் 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.
ஆனால் 6-ஆவது கேமில் நடாலின் சர்வீஸை முறியடித்த ஃபெடரர், 8-ஆவது கேமில் மீண்டும் நடாலின் சர்வீஸை தகர்த்தார். இதனால் 5-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற ஃபெடரர், 9-ஆவது கேமில் தனது சர்வீஸை தக்கவைத்ததன் மூலம் அந்த செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார்.
ஆட்டத்தை வெற்றியில் முடித்தபோது ஃபெடரர் கண் கலங்கினார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் 5-ஆவது பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் ஃபெடரர். ஏறக்குறைய நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்றுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல முடியாமல் தவித்து வந்த ஃபெடரர், முழங்கால் காயத்திலிருந்து மீண்டு வந்த கையோடு ஆஸ்திரேலிய ஓபனில் வாகை சூடியிருக்கிறார்.
மூன்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தலா 5 அல்லது அதற்கு மேற்பட்ட பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஃபெடரர். அவர், விம்பிள்டனில் 7 பட்டங்களையும், ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன்களில் தலா 5 பட்டங்களையும் வென்றுள்ளார்.
இறுதிச்சுற்றில் நடாலை வீழ்த்தியதோடு சேர்த்து கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 314 வெற்றிகளைப் பெற்றுள்ளார் ஃபெடரர். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அதிக ஆட்டங்களில் வென்றவர் என்ற சாதனையும் ஃபெடரர் வசமேயுள்ளது.
ஆஸ்திரேலிய ஓபனில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் ஃபெடரர் கூறியதாவது:
“மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இந்த நேரத்தில் மீண்டும் உச்சகட்ட ஃபார்முக்கு திரும்பியிருக்கும் நடாலுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இருவரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றில் மீண்டும் விளையாடுவோம் என நான் நம்பவில்லை. நடாலும் நம்பியிருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன். இந்த ஆட்டத்தில் நடாலிடம் தோற்றிருந்தாலும்கூட மகிழ்ச்சியாகத்தான் இருந்திருப்பேன்.
டென்னிஸ் மிகக் கடினமான விளையாட்டு. இங்கு டிரா என்பது கிடையாது. வெற்றி அல்லது தோல்வி மட்டும்தான். தொடர்ந்து சிறப்பாக விளையாடுங்கள் நடால். டென்னிஸுக்கு நீங்கள் தேவை” என்றுத் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.