
பழைய பன்னீர் செல்வமாக திரும்பி வந்தேட்னு சொல்லு….10 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியன் ஓபனில் ‘பெடரர் சாம்பியன்’
“வந்துட்டேன்னு சொல்லு'', “பழைய பன்னீர் செல்வமா வந்துட்டேனு சொல்லு'' என்ற சினிமா டயலாக் போல, வயதானா பின்னும், டென்னிஸ் அரங்கில் தான் ஒரு சிங்கம் என்பதை ரோஜர் பெடரர் மீண்டும் நிரூபித்து விட்டார்.
மெல்போர்னில் நடந்து வந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் நடாலை வீழ்த்தி சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டுக்குபின் ஆஸ்திரேலியன் ஓபனில் பட்டம் வெல்லமுடியாமல் தவித்து வந்த பெடரர் 7 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தான் சாம்பியன் என்பதை தனது திறமையை நிரூபித்து விட்டார்.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன்மெல்போர்ன் நகரில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் மெல்போர்னில் உள்ள ராட் லேவர் ஏரினா அரங்கில் நேற்று நடந்தது. இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து வீரரும், முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரோஜர் பெடரரை எதிர்த்து களம் கண்டார் இடது கை வீரரும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவருமான ரபேல்நடால்.
இருவருமே கடந்த சில ஆண்டுகளாக காயத்தால் அவதிப்பட்டு வந்தனர். நடால்இடதுகை மணிக்கட்டு காயத்தாலும், பெடரர் இடது கனுக்கால் காயத்தாலும் சிரமப்பட்டு வந்தனர்.
தொடக்கத்தில் இருந்த இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்ற கணக்கில் தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், ஒவ்வொரு செட்டும் ரசிகர்களை பரபரப்பாகவே வைத்து இருந்தது. முதல் செட்டை பெடரர்கைப்பற்றினால், அடுத்த செட்டில் பதிலடி கொடுத்து நடால் வென்று தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார்.
இருவரும் தலா 2 செட்கள் கைப்பற்றிய நிலையில், வெற்றியாளரை இறுதி செய்யும் கடைசி மற்றும் 5-வது செட்டில் நடாலை 6-3 என்ற செட்களில் சாய்த்து நிரூபித்தார் பெடரர்.
3 மணிநேரம் 38 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் நடாலை 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட்களில் போராடி வெளியேற்றினார் பெடரர்.
கடந்த 2012ம் ஆண்டுதான் பெடரர் கடைசியாக, கிராண்ட்ஸ்லாம் போட்டியானவிளம்பிள்டன் பட்டத்தை வென்று இருந்தார். அதன்பின், 5 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். மேலும், 7 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் ஆஸ்திரேலியன் ஓபனில் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.
இதுவரை கிராண்ட்ஸ்லாம்களில் நடாலுக்கு எதிராக 8 பைனலில் மோதியுள்ளபெடரர் அதில் 6 முறை தோல்வியுற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக நடாலுக்கு எதிராக 34 ஆட்டங்களில் 11 மட்டுமே பெடரர் வென்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், கடந்த 1972ம் ஆண்டுக்குபின், 35 வயதில் ஆஸ்திரேலியன்ஓபன் பட்டத்தை வென்ற வீரர் எனும் பெருமையையும் பெடரர் பெற்றார். இதற்கு முன் கடந்த 1972-ல் ஆஸ்திரேலிய வீரர் கென் ரோஸ்வெல்தான் அதிக வயதில் பட்டம் வென்ற வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன் பட்டம் வென்றவுடன் பெடரர் ரசிகர்களைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். வெற்றி பெற்ற ெபடரருக்கு ரூ. 25 கோடி பரிசாக அளிக்கப்பட்டது.
பாக்ஸ் மேட்டர்....
சாம்பியன் பட்டம் வென்றபின் பெடரர் கூறுகையில், “ வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு எனது உணர்ச்சிகள் இருக்கிறது. என்னால் பேசமுடியவில்லை. மீண்டும் அபாரமாக திறமையுடன் திரும்பி வந்த நடாலுக்கு எனது வாழ்த்துக்கள். இருவரும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவோம் என நினைக்கவில்லை. வலிமையான நடாலை நான் தோற்கடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.டென்னிஸ் மிக கடுமையான விளையாட்டு. இதில் ஒருவர் மட்டுமே சாம்பியனாக முடியும். இந்த பட்டத்தை நடாலுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நடால் தொடர்ந்து இதுபோல் சிறப்பாக விளையாட வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.