கபில் தேவ்-பாண்டியா.. சச்சின்-கோலி!! மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடந்த அதிசய சம்பவங்கள்

By karthikeyan VFirst Published Aug 22, 2018, 12:34 PM IST
Highlights

இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பல அரிய சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்தியா-இங்கிலாந்து இடையே  டிரெண்ட் பிரிட்ஜில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கும் இன்னும் ஒரு விக்கெட்டே தேவை. கடைசி நாளான இன்று இந்திய அணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. 

இந்த டெஸ்ட் போட்டியில் பல அரிய சம்பவங்கள் நடந்துள்ளன. இப்படி நடப்பதெல்லாம் மிக மிக அரிது. அதுமாதிரியான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவை என்னென்ன என்பதை பார்ப்போம். 

1. தவான் - ராகுல் பார்ட்னர்ஷிப்:

இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ராகுல் - தவான் தொடக்க ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 60 ரன்களை சேர்த்தது. இது கிரிக்கெட்டில் அரிதாக நடக்கக்கூடிய விஷயம்.

இதற்கு முன்னதாக 2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் - டிவில்லியர்ஸ் ஜோடி இரண்டு இன்னிங்ஸ்களிலும் 124 ரன்கள் எடுத்தது.  அதேபோல 2009ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் - கேடிச் ஜோடி இரண்டு இன்னிங்ஸ்களிலும் 62 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 

2. கபில் தேவ் - ஹர்திக் பாண்டியா இடையேயான ஒற்றுமை:

கபில் தேவுடன் ஒப்பிடப்பட்டு, பின்னர் சரியாக ஆடாததால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, டிரெண்ட் பிரிட்ஜில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பான பங்களிப்பை அளித்தார். 

இது ஹர்திக் பாண்டியாவின் 10வது டெஸ்ட் போட்டி. இந்த போட்டியில் தனது 500வது டெஸ்ட் ரன்னை எட்டினார் பாண்டியா. கபில் தேவும் தனது 10வது டெஸ்ட் போட்டியில்தான் 500வது ரன்னை எட்டினார். 

3. சச்சின் - கோலி இடையேயான ஒற்றுமை:

சச்சினுக்கு அடுத்து இந்திய அணியில் அவரது இடத்தை பிடித்துள்ளவர் கோலி. சச்சினை போலவே சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களை குவித்துவருகிறார் கோலி. சச்சினின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை கோலி முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கோலி இந்த போட்டியில் அடித்தது அவரது 23வது டெஸ்ட் சதம். சர்வதேச போட்டிகளில்(டெஸ்ட், ஒருநாள் சேர்த்து) 58வது சதம். சச்சின் டெண்டுல்கரும் இங்கிலாந்துக்கு எதிராகத்தான் தனது 58வது சதத்தை அடித்தார். 2001ம் ஆண்டு சச்சின் தனது 58வது சதத்தை இங்கிலாந்துக்கு எதிராக விளாசினார். அதுவும் கோலி அடித்த இதே 103 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!