அஷ்வினுக்கு ஆப்பு அடிக்கும் கோலி..? அதிர்ச்சியில் சீனியர் ஸ்பின்னர்கள்

First Published Jul 13, 2018, 3:00 PM IST
Highlights
kuldeep and chahal may take place in indian test squad


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவும் சாஹலும் எடுக்கப்படலாம் என்பதை கேப்டன் கோலி, சூசகமாக தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்தவரை, அவரது ஆஸ்தான ஸ்பின்னர்களாக திகழ்ந்தவர்கள் அஷ்வினும் ரவீந்திர ஜடேஜாவும். கோலி கேப்டனான பிறகு அஷ்வினும் ஜடேஜாவும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டு ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவும் சாஹலும் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் ஆகினர்.

அஷ்வினும் ஜடேஜாவும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடி வருகின்றனர். அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் இடத்தை குல்தீப்பும் சாஹலும் நிரப்பிவிட்டனர். இந்த ஸ்பின் இணை சிறப்பாகவே வீசுகிறது. இங்கிலாந்து தொடரில் சாஹல் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் குல்தீப் அசத்துகிறார். முதல் டி20 போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிய குல்தீப், நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

குல்தீப்பின் அசத்தலான பவுலிங்கால், பேட்டிங்கில் வலுவான இங்கிலாந்து அணியை 268 ரன்களில் இந்திய அணி சுருட்டியது. பின்னர் அந்த இலக்கை ரோஹித்தின் அதிரடி சதத்தால் எளிதாக எட்டி இந்திய அணி வெற்றி பெற்றது.

போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் கோலி, டெஸ்ட் அணியிலும் குல்தீப்பும் சாஹலும் எடுக்கப்படுவார்களா? என்ற கேள்விக்கு ஆச்சரியங்கள் நிகழலாம் என பதிலளித்தார். கோலியின் இந்த பதிலால், டெஸ்ட் அணியில் மட்டும் ஆடிவரும் அஷ்வினும் ஜடேஜாவும் அதிலிருந்தும் நீக்கப்பட்டுவிட்டு அவர்கள் இடத்தை குல்தீப்பும் சாஹலும் பிடித்துவிடுவார்களோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இங்கிலாந்து சூழலுக்கு நன்றாக தயாராகிவிட்ட குல்தீப், அங்குள்ள சூழலை புரிந்துகொண்டு அருமையாக வீசிவருகிறார். குல்தீப்பை சமாளிக்க இங்கிலாந்து வீரர்கள் வியூகங்களை வகுக்கவில்லை என்றால், டெஸ்ட் போட்டிகளிலும் அவர் எளிதில் விக்கெட்டுகளை வீழ்த்தி விடுவார் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், குல்தீப்பும் தொடர்ந்து அருமையாக பந்துவீசுவதால் டெஸ்ட் போட்டிகளில் அவரை ஒரு முக்கிய காரணியாக இந்திய அணி நிர்வாகமும் கோலியும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது. அப்படி குல்தீப்பும் சாஹலும் டெஸ்ட் போட்டிகளுக்கும் எடுக்கப்பட்டுவிட்டால் அஷ்வினின் நிலை கேள்விக்குறிதான்.
 

click me!