ஆஸ்திரேலியாவுல அடி வச்சதுமே மோசமான சம்பவத்தை செய்த குருணல்!! இப்படி செய்வோம்னு அவரே நெனச்சு பார்த்துருக்க மாட்டாரு

By karthikeyan VFirst Published Nov 22, 2018, 1:02 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் குருணல் பாண்டியா விரும்பத்தகாத எதிர்மறை சாதனை செய்த பட்டியலில் இணைந்துள்ளார். 
 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் குருணல் பாண்டியா விரும்பத்தகாத எதிர்மறை சாதனை செய்த பட்டியலில் இணைந்துள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி நேற்று பிரிஸ்பேனில் நடந்தது. இந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் இன்னின்ஸில் 16.1 ஓவரின் போது மழை குறுக்கிட்டது. அப்போதைக்கு அந்த அணி 153 ரன்களை எடுத்திருந்தது. அதன்பிறகு 17 ஓவர்களாக குறைக்கப்பட்ட பிறகு எஞ்சிய 5 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. 17 ஓவர் முடிவில் அந்த அணி 158 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து டக்வொர்த் முறைப்படி இந்திய அணிக்கு 17 ஓவரில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 174 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தவான் 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி இலக்கை விரட்ட முயன்றார். எனினும் இந்திய அணி 17 ஓவர் முடிவில் 169 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி.

இந்த போட்டியில் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சொதப்பினார் குருணல் பாண்டியா. குருணலின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார் மேக்ஸ்வெல். குருணல் வீசிய 14வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார் மேக்ஸ்வெல். அந்த ஓவரில் மட்டுமே 23 ரன்கள் குவிக்கப்பட்டன. அதேபோல் அவர் வீசிய 16வது ஓவரில் ஸ்டோய்னிஸ் ஒரு சிக்ஸரும் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸரும் விளாசினர். அந்த ஓவரின் கடைசி பந்தும் சிக்ஸருக்கு பறந்திருக்க வேண்டியது. ஆனால் மேக்ஸ்வெல் அடித்த அந்த பந்து எதிர்பாராத விதமாக ஸ்பைடர் கேமரா மீது பட்ட காரணத்தால் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. 14வது ஓவரில் 23 ரன்களை வாரி வழங்கிய குருணல், 16வது ஓவரில் 17 ரன்களை கொடுத்தார். எனவே இந்த இரண்டு ஓவர்களில் மட்டுமே 40 ரன்களை வாரி கொடுத்தார் குருணல். மொத்தமாக 4 ஓவர்களை வீசி 55 ரன்களை வாரிவழங்கிய குருணல், எதிர்மறையான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். 

டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த இந்திய பவுலர்களின் பட்டியலில் மூன்றாமிடத்தை பிடித்தார் குருணல் பாண்டியா. குருணல் பாண்டியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 55 ரன்களை விட்டுக்கொடுத்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 64 ரன்களை விட்டுக்கொடுத்த சாஹல், இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 2007ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 57 ரன்களை வாரி வழங்கிய ஜோஹிந்தர் சர்மா இரண்டாமிடத்திலும் தற்போது 55 ரன்களை வாரி வழங்கிய குருணல் பாண்டியா மூன்றாமிடத்திலும் உள்ளனர். 
 

click me!