தோல்வி பழியை ஒரு வீரர் மேல மட்டும் போடக்கூடாது!! ஆனாலும் இந்தியாவின் தோல்விக்கு அவர் தான் முக்கிய காரணம்

By karthikeyan VFirst Published Nov 22, 2018, 10:57 AM IST
Highlights

பொதுவாக ஒரு குழுவாக ஆடும் ஆட்டங்களில் ஒரு தனிப்பட்ட வீரரை தோல்விக்கு காரணமாக சுட்டிக்காட்ட கூடாது. ஆனால் அதிகமான தவறுகளை செய்த ஒரு வீரருக்கு தோல்வியில் முக்கியமான பங்கு இருக்கும் என்பதையும் மறுக்க இயலாது.
 

பொதுவாக ஒரு குழுவாக ஆடும் ஆட்டங்களில் ஒரு தனிப்பட்ட வீரரை தோல்விக்கு காரணமாக சுட்டிக்காட்ட கூடாது. ஆனால் அதிகமான தவறுகளை செய்த ஒரு வீரருக்கு தோல்வியில் முக்கியமான பங்கு இருக்கும் என்பதையும் மறுக்க இயலாது.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் குருணல் பாண்டியாவின் ஆட்டம். பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சொதப்பினார். 

குருணலின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார் மேக்ஸ்வெல். குருணல் வீசிய 14வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார் மேக்ஸ்வெல். அந்த ஓவரில் மட்டுமே 23 ரன்கள் குவிக்கப்பட்டன. அதேபோல் அவர் வீசிய 16வது ஓவரில் ஸ்டோய்னிஸ் ஒரு சிக்ஸரும் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸரும் விளாசினர். அந்த ஓவரின் கடைசி பந்தும் சிக்ஸருக்கு பறந்திருக்க வேண்டியது. ஆனால் மேக்ஸ்வெல் அடித்த அந்த பந்து எதிர்பாராத விதமாக ஸ்பைடர் கேமரா மீது பட்ட காரணத்தால் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. 14வது ஓவரில் 23 ரன்களை வாரி வழங்கிய குருணல், 16வது ஓவரில் 17 ரன்களை கொடுத்தார். எனவே இந்த இரண்டு ஓவர்களில் மட்டுமே 40 ரன்களை வாரி கொடுத்தார் குருணல்.

மொத்தமாக 4 ஓவர்கள் வீசி 55 ரன்களை கொடுத்தார் குருணல் பாண்டியா. இதுதான் அந்த அணி பெரிய ஸ்கோரை எட்ட காரணமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் சொதப்பினார் குருணல் பாண்டியா. கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரின் இரண்டாவது பந்தை அடிக்காமல் விட்டார். இதனால் அழுத்தம் அதிகரிக்க, அடுத்த பந்திலேயே விக்கெட்டையும் பறிகொடுத்தார். இதனால் இக்கட்டான சூழலில் கடைசி ஓவரில் இரண்டு பந்துகள் வீணாகின. அதனால் கடைசி மூன்று பந்துகளில் 11 ரன்கள் என்று மொத்த நெருக்கடியும் தினேஷ் கார்த்திக்கின் மீது இறங்கியதால் வேறு வழியின்றி தூக்கி அடித்து அவரும் ஆட்டமிழந்தார். 

கடைசி ஓவரில் இரண்டு பந்துகளை(அவுட்டான பந்தும் சேர்த்து) வீணடித்ததால் தான் இந்திய அணி வெற்றி பெற முடியாமல் போனது. ரோஹித், கோலி ஆகிய இரண்டு முக்கிய வீரர்களும்கூட தான் ரன் அடிக்காமல் ஏமாற்றினர். அப்படியிருக்கையில் கடைசி நேரத்தில் களமிறங்கிய குருணல் மீது குற்றம்சாட்டுவது சரிதானா? என்ற கேள்வி எழலாம். ஆனால் எல்லா போட்டியிலுமே டாப் ஆர்டர்கள் சிறப்பாக ஆட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படி அவர்கள் சோபிக்காத நிலையில், பின்வரிசை வீரர்கள் எந்த சூழலையும் எதிர்கொண்டு ஆட வேண்டும். அதுவும் நேற்றைய போட்டியின் சூழலை பொறுத்தமட்டில் ஒரு ஓவருக்கு 13 ரன்கள் என்பது அவ்வளவு பெரிய கடினமான இலக்கு அல்ல, அடிக்கக்கூடியதுதான். 

அதிலும் அணியில் இடம் கிடைக்கும் தருணத்திற்காக காத்திருந்த ஒரு வீரர், இதுபோன்ற சூழல்களை பயன்படுத்தி வாய்ப்பை கப்பென்று பற்றிக்கொள்ள வேண்டும். கடைசி நேர பரபரப்பில் அழுத்தம் அதிகமாக இருந்தால், பந்தை அடிக்க நினைக்காமல், குறைந்தது சிங்கிள் தட்டி தினேஷ் கார்த்திக்கிற்காவது பேட்டிங் வாய்ப்பை கொடுத்திருக்கலாம். அதைக்கூட செய்யாமல், பந்தை வீணடித்தால் தோல்விதான் மிஞ்சும். 

கிடைத்த அரிய வாய்ப்பை வீணடித்துவிட்டார் குருணல் பாண்டியா. 
 

click me!