பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த கொல்கத்தா!! பஞ்சாப்பை வீழ்த்தி அபார வெற்றி

First Published May 12, 2018, 10:27 PM IST
Highlights
kolkata knight riders defeats punjab


பஞ்சாப் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. 

பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் அணியுடன் கொல்கத்தா அணி மோதியது. இந்தூரில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் லின்னும் சுனில் நரைனும் நல்ல தொடக்கத்தை அளித்தனர். லின் 27 ரன்களில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய சுனில் நரைனுடன் உத்தப்பா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியது. பஞ்சாப்பின் பந்துவீச்சை பறக்கவிட்ட சுனில் நரைன், 36 பந்துகளுக்கு 75 ரன்கள் குவித்தார். சுனில் நரைனின் அதிரடி பேட்டிங்கை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய பஞ்சாப் அணிக்கு ஆண்ட்ரூ டை பிரேக் கொடுத்தார். சுனில் நரைன் மற்றும் உத்தப்பா ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் டை வீழ்த்தினார்.

எனினும் அதன்பிறகு களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும் ஆண்ட்ரே ரசலும் அதிரடியை கைவிடவில்லை. சுனில் நரைன் விட்டுச்சென்ற பணியை தினேஷ் கார்த்திக் தொடர்ந்தார். அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக், 22 பந்துகளில் அரைசதம் கடந்தார். அரைசதம் கடந்த அடுத்த பந்திலேயே தினேஷ் கார்த்திக் அவுட்டானார்.

சுனில் நரைன் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 245 ரன்களை குவித்தது. 

246 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கெய்ல், 21 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு ரன் ஏதும் எடுக்காமல் மயன்க் அகர்வாலும் 3 ரன்களில் கருண் நாயரும் அடுத்தடுத்து வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் அதிரடியாக ஆடி ரன்களை குவித்துவந்த ராகுல், அரைசதம் கடந்தும் அதிரடியை தொடர்ந்தார். 29 பந்துகளில் 66 ரன்களை குவித்த நிலையில், சுனில் நரைன் பந்தில் ராகுல் போல்டாகி வெளியேறினார்.

ஆரோன் ஃபின்ச்சும் அக்ஸர் படேலும் சிறிது நம்பிக்கை அளித்தனர். பின்னர் அவர்களும் ஆட்டமிழக்க, போட்டி பஞ்சாப்பின் கையை மீறி போனது. பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின், 22 பந்துகளுக்கு 45 ரன்கள் அடித்து அவுட்டானார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. 
 

click me!