
விக்கெட் கீப்பர் எம்.எஸ். தோனியை மட்டும் விமர்சிப்பது ஏன்? என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா - நியூஸிலாந்து டி-20 தொடர் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா வெற்றி பெற்றது.
குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது டி-20 ஆட்டத்தில் தோனி 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து வெற்றிப் பெற்றது.
இதனையடுத்து, டி-20 போட்டிகளில் இளைஞர்களுக்கு வழிவிடுவது குறித்து முன்னாள் கேப்டன் தோனி சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ் லஷ்மண் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அணியில் தோனியின் பங்களிப்பை அவருக்கு குழு மேலாண்மை புரிய வைக்க வேண்டும் என்று முன்னாள் அதிரடி வீரர் சேவாக்கும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி செய்தியாளர்களிடம் கூறியது:
“செவ்வாய்க்கிழமை நடைபெற்ற டி-20 இறுதி ஆட்டத்தில் கடைசி ஓவரை வீசிய ஹார்த்திக் பாண்டியா மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. அந்த ஓவரில் அவருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. கடைசி மூன்று பந்துகள் இருக்கும்போது நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்று என்னிடம் பாண்டியா தெரிவித்தார். நாங்கள் ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என்று நம்பினோம். வெற்றி பெற்றோம்.
சிலர் தோனி குறித்து மட்டும் விமர்சித்து வருவது ஏன்? என்று எனக்குப் புரியவில்லை. பேட்ஸ்மேனாக நான் சோபிக்கவில்லை எனில் எந்த விமர்சனங்களும் எழுவதில்லை. ஒருவேளை நான் 35 வயதுக்குள் இருப்பதால் விமர்சனங்கள் எழாமல் இருக்கலாம்.
ஒவ்வோர் ஆட்டத்திலும் சிறப்பான பங்களிப்பையும், கடின உழைப்பையும் தோனி அளித்து வருகிறார். அணியில் தன்னுடைய பங்களிப்பு என்ன என்பது அவருக்குத் தெரியும். விமர்சிப்பவர்களுக்கு மிகவும் பொறுமை தேவை” என்றார் கோலி.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.