தோனி அதிரடியா ஆடினால் நாங்க ஏன் சந்தோஷப்படணும்..? கோலி தடாலடி

First Published Apr 26, 2018, 1:14 PM IST
Highlights
kohli opinion about dhoni batting in ipl


தோனி அதிரடியாக ஆடியது மகிழ்ச்சி என்றாலும் எங்களுக்கு எதிராக அடிக்கும்போது அதை பார்க்க நன்றாக இல்லை என்று சிரித்தபடியே தெரிவித்தார் கோலி.

ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலியும் டிகாக்கும் களமிறங்கினர். கோலி 18 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து டிகாக்கும் டிவில்லியர்ஸும் ஜோடி சேர்ந்தனர். சென்னை அணியின் பந்து வீச்சை இந்த ஜோடி சரமாரியாக அடித்து நொறுக்கியது. டிவில்லியர்ஸ் மீண்டும் ருத்ர தாண்டவம் ஆட தொடங்கினார். அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸ் 23 பந்துகளில் அரைசதம் கடந்தார். 

டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆட, அரைசதம் கடந்த மாத்திரத்திலேயே டிகாக் அவுட்டாகி வெளியேறினார். ஆனால் தொடர்ந்து அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸ், 30 பந்துகளில் 68 ரன்கள் அடித்து வெளியேறினார்.

இதையடுத்து ரன்ரேட் சற்று குறைய தொடங்கியது. எனினும் மந்தீப் சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி, 205 ரன்கள் குவித்தது.

206 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின், வாட்சன், ரெய்னா, பில்லிங்ஸ், ஜடேஜா ஆகியோர் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 74 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் ராயுடு நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடிவந்தார். 4 விக்கெட் வீழ்ச்சிக்குப் பிறகு ராயுடுவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். களத்திற்கு வந்த தோனி, 2வது பந்திலேயே சிக்ஸர் அடித்து மிரட்டினார்.

அதன்பிறகு தோனியும் ராயுடுவும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 5 விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய தோனி, 34 பந்துகளுக்கு 70 ரன்கள் குவித்து சென்னை அணியை வெற்றியடைய செய்தார். ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

போட்டிக்கு பிறகு பேசிய பெங்களூரு அணி கேப்டன் கோலி, 200 ரன்கள் அடித்தும் வெற்றியடைய முடியாமல் போனது. தொடக்கத்திலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தியும் வெற்றி பெற முடியவில்லை. கடைசி நேரத்தில் பவுலிங் சரியில்லை. இதுதொடர்பாக விவாதித்து அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. 

இந்த ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடிவருகிறார். சிறந்த ஷாட்களை ஆடிவருகிறார். அவர் அதிரடியாக ஆடுவது மகிழ்ச்சி என்றாலும், எங்களுக்கு எதிராக ஆடுவதை பார்த்து ரசிக்க முடியவில்லை என சிரித்தபடி கோலி தெரிவித்தார். 
 

click me!