கோப்பையை நீங்களே வச்சுருக்காம சின்ன பசங்ககிட்ட கொடுங்க ரோஹித்!! தோனியின் செயலால் நெகிழ்ந்த இளம் வீரர்

By karthikeyan VFirst Published Oct 9, 2018, 10:34 AM IST
Highlights

ஆசிய கோப்பையை வென்றதும் அந்த கோப்பையை அணியின் இளம் வீரரான தன்னிடம் கொடுக்குமாறு ரோஹித்திற்கு தோனி அறிவுறுத்தியதாக இளம் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது தெரிவித்துள்ளார். 
 

ஆசிய கோப்பையை வென்றதும் அந்த கோப்பையை அணியின் இளம் வீரரான தன்னிடம் கொடுக்குமாறு ரோஹித்திற்கு தோனி அறிவுறுத்தியதாக இளம் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது தெரிவித்துள்ளார். 

இளம் வீரர்களை ஊக்குவித்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வாய்ப்புகளையும் வழங்குவதில் முன்னாள் கேப்டன் தோனிக்கு நிகர் தோனி தான். இளம் வீரர்களுக்கு முன்னிறுத்தி அவர்களுக்கு கூடுதல் பொறுப்பை வழங்கி அவர்களிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்துவிடுவார் தோனி. 

அனைத்து இளம் வீரர்களுக்கும் மிகவும் பிடித்த கேப்டன் தோனி. நெருக்கடியான சூழல்களிலும் வீரர்களை பதற்றப்படுத்தாமல் நிதானமாக தேவையான பயனுள்ள ஆலோசனைகளை வழங்குவார். தோனியின் நுட்பமான சிறந்த கேப்டன்சியால் தான் இந்திய அணிக்கு மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்தார். 

தோனி கேப்டன்சியிலிருந்து விலகிய பிறகு கோலி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கோலியின் அணுகுமுறை தோனியிடமிருந்து முற்றிலும் மாறானது. தோனி கேப்டன்சியிலிருந்து விலகினாலும் இக்கட்டான நேரங்களில் கேப்டன் கோலியாக இருந்தாலும் சரி, ரோஹித்தாக இருந்தாலும் சரி, ஆலோசனைகளை வழங்குவது தோனி தான். 

அதேபோல, எந்த தொடரை வென்றாலும் கோப்பையை தான் வைத்துக்கொள்ளாமல் இளம் வீரர்களிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கி நிற்பது தோனியின் வழக்கம். அது உலக கோப்பையாகவே இருந்தாலும் உடனடியாக இளம் வீரர்களின் கைகளில் கொடுத்து அழகு பார்ப்பார் தோனி. கோப்பையுடன் புகைப்படம் எடுக்கும்போது கூட இளம் வீரர்களையும் மற்ற வீரர்களையும் முன்னிலைப்படுத்திவிட்டு தான் ஓரமாக நிற்பார். இது தலைவனுக்கு தேவையான முக்கியமான தகுதிகளில் ஒன்று. அது தோனியிடம் அளாதியாக இருந்ததை பல தருணங்களில் பார்த்திருக்க முடியும்.

அந்த வகையில், இளம் வீரர் கலீல் அகமது அண்மையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். கோலி ஓய்வில் இருந்ததால் ஆசிய கோப்பை தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். ரோஹித் சர்மா சிறப்பாக கேப்டன்சி செய்தார். ஆசிய கோப்பையை இந்திய அணி வென்றது. 

ஆசிய கோப்பையை ரோஹித் சர்மா, இளம் வீரர் கலீல் அகமதுவிடம் கொடுத்தார். இந்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது. கலீல் அகமதுவும் மகிழ்ச்சியுடன் கோப்பையை தாங்கி நின்றார். இதுகுறித்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கலீல் அகமது பகிர்ந்துள்ளார். அதில், ஆசிய கோப்பையை வென்றதும் கோப்பை ரோஹித் சர்மாவின் கையில் இருந்தது. அப்போது ரோஹித்திடம் சென்ற தோனி, கோப்பையை இளம் வீரர்களிடம் கொடுங்கள். இருப்பதிலேயே கலீல் அகமது தான் இளம் வீரர்; இது அவருக்கு அறிமுக தொடரும் கூட; அதனால் அவரிடம் கொடுங்கள் என ரோஹித்திடம் தோனி கூறினார். பின்னர் இருவரும் கோப்பையை என்னிடம் கொடுத்தனர். அந்த தருணம் என்னால் மறக்க முடியாத நெகிழ்ச்சியான தருணம் என தெரிவித்துள்ளார். 
 

click me!