
கோவையில் நடைபெற்ற தேசிய இளையோர் தடகளப் போட்டியில் கேரள அணி 22-ஆவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தமிழக அணி 2-ஆவது இடத்தைப் பிடித்தது.
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 32-ஆவது தேசிய ஜூனியர் தடகளப் போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 10-ஆம் தேதி தொடங்கின. இதில், 28 மாநிலங்களைச் சேர்ந்த 1,800 வீரர்கள், 900 வீராங்கனைகள் என சுமார் 2,700 பேர் பங்கேற்றனர்.
கடைசி நாளான திங்கள்கிழமை நடைபெற்ற 20 வயதுக்குள்பட்ட ஆடவர் 400 மீ. தொடர் ஓட்டத்தில் தமிழக வீரர்கள் பி.சங்கமித்ரன், கே.மணிகண்டன், சி.ஆகாஷ் பாபு, பி.ஆகாஷ் ஆகியோர் அடங்கிய அணி 3 நிமிடம், 14.64 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தைப் பிடித்தது. 18 வயதுக்குள்பட்ட 200 மீ. ஓட்டத்தில் தமிழகத்தின் பி.நிதின் (21.69 விநாடி) முதலிடம் பிடித்தார். 20 வயதுக்குள்பட்ட 200 மீ. ஓட்டத்தில் தமிழகத்தின் பி.ஆகாஷ் 2-ஆவது இடம்பிடித்தார்.
18 வயதுக்குள்பட்ட மகளிருக்கான 800 மீ. ஓட்டத்தில் தமிழக வீராங்கனைகள் கெளதமி (2:18.39), எல்.சமயஸ்ரீ (2:18.61) ஆகியோர் முதல் இரு இடங்களைப் பிடித்தனர். 20 வயதுக்குள்பட்ட மகளிர் சங்கிலிக் குண்டு எறிதலில் தமிழகத்தின் எஸ்.ஸ்ரீநிதி (47.80 மீ.) முதலிடம் பிடித்தார்.
20 வயதுக்குள்பட்ட மகளிருக்கான 200 மீ. ஓட்டத்தில் தமிழகத்தின் வி.ரேவதி (24.90 விநாடி) முதலிடத்தையும், ஏ.சந்திரலேகா (25.14 விநாடி) 3-ஆவது இடத்தையும் பிடித்தனர்.
16 வயதுக்குள்பட்ட 200 மீ. ஓட்டத்தில் தமிழகத்தின் ஆர்.கிரிதரணி (25.34 விநாடி) முதலிடம் பிடித்தார். 18 வயதுக்குள்பட்ட மகளிர் 200 மீ. ஓட்டத்தில் தமிழகத்தின் கே.ராமலட்சுமி, வி.சுபா ஆகிய இருவரும் 2, 3-ஆவது இடங்களைப் பிடித்தனர்.
5 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 429 புள்ளிகளைப் பெற்ற கேரள அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தமிழக அணி 413.5 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடம்பிடித்தது. ஆடவர் பிரிவில் ஹரியாணா அணியும் (273 புள்ளிகள்), மகளிர் பிரிவில் கேரள அணியும் (268 புள்ளிகள்) சாம்பியனாகின.
தேசிய இளையோர் தடகளத்தில் இதுவரை 4 முறை பட்டம் வென்றுள்ள தமிழக அணி, கடந்த ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற போட்டியிலும் 2-ஆவது இடத்தையே பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் 14 தேசிய சாதனைகள் உள்பட 24 சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. வட்டு எறிதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், கம்பு ஊன்றித் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் இந்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. 24 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டித் தொடரில் சாதனை படைத்துள்ளனர்.
தமிழக வீராங்கனை எம்.லோகநாயகி, சிறந்த தடகள வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் 400 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் 1:00.14 நிமிடத்தில் இலக்கை எட்டியதற்காக பாராட்டப்பட்டார்.
வெற்றி பெற்ற அணிகள், வீரர்-வீராங்கனைகளுக்குத் தமிழ்நாடு தடகள சங்கத் தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், கோவை மாவட்ட தடகள சங்கத் தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு, நீலகிரி மாவட்டத் தலைவர் எஸ்.மோகன்தாஸ், ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு, ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழும முதன்மைச் செயல் அலுவலர் சுந்தரராமன் ஆகியோர் பரிசளித்துப் பாராட்டினர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.