
பிரேசில் கிராண்ட்ப்ரீ ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்ஸிடஸ் டிரைவர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடத்தைப் பிடித்தார்.
இதன்மூலம் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை நெருங்கியுள்ளார் ஹாமில்டன். புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மற்றொரு மெர்ஸிடஸ் டிரைவரான நிகோ ரோஸ்பெர்க்கைவிட 12 புள்ளிகள் பின்தங்கியுள்ளார் ஹாமில்டன்.
இந்த சீசனின் கடைசிச் சுற்றான அபுதாபி கிராண்ட்ப்ரீ போட்டி அபுதாபியில் வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் முதலிடத்தைப் பிடிக்கும்பட்சத்தில் ஹாமில்டன் 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வார்.
பிரேசிலின் சாவ் பாலோ நகரில் கடும் மழைக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசிச் சுற்றுக்கு முந்தைய சுற்றான பிரேசில் கிராண்ட்ப்ரீ போட்டியில் லீவிஸ் ஹாமில்டன் 3 மணி, 1 நிமிடம், 1.335 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தைப் பிடித்தார்.
பிரேசில் கிராண்ட்ப்ரீ போட்டியில் 10-ஆவது முறையாக பங்கேற்ற ஹாமில்டன் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் இந்த சீசனில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த ஆண்டில் 9-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள ஹாமில்டனுக்கு ஒட்டுமொத்தத்தில் இது 52-ஆவது வெற்றியாகும்.
ஹாமில்டனுக்கு அடுத்தபடியாக நிகோ ரோஸ்பெர்க் 2-ஆவது இடத்தையும், ரெட்புல் டிரைவர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 3-ஆவது இடத்தையும், ஃபோர்ஸ் இந்தியா டிரைவர் செர்ஜிகோ பெரேஸ், பெராரி டிரைவர் செபாஸ்டியன் வெட்டல் ஆகியோர் அடுத்த இரு இடங்களையும் பிடித்தனர்.
புள்ளிகள் பட்டியலில் நிகோ ரோஸ்பெர்க் 367 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹாமில்டன் 355 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும் உள்ளனர். இவர்களில், அபுதாபி கிராண்ட்ப்ரீ போட்டியில் முதலிடத்தைப் பிடிப்பவர் சாம்பியன் பட்டம் வெல்வார்.
ஃபார்முலா 1 பந்தயத்தில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஹாமில்டன், கடைசியாக நடைபெற்ற 3 சுற்றுகளிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். எனவே அவர் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் முதல்முறையாக சாம்பியனாகும் வாய்ப்பை நெருங்கியுள்ள நிகோ ரோஸ்பெர்க்கும் கடுமையாகப் போராடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.