விளையாடுறதுக்கு முன்னாடியே இவ்வளவு பேச்சா..? ஆஃப்கானிஸ்தான் கேப்டனுக்கு கருண் நாயரின் பதிலடி

First Published Jun 12, 2018, 4:54 PM IST
Highlights
karun nair retaliation to afghan skipper


இந்திய அணியை விட சிறந்த ஸ்பின்னர்களை கொண்டிருப்பதாக ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் கூறிய கருத்துக்கு இந்திய வீரர் கருண் நாயர் பதிலடி கொடுத்துள்ளார். 

எல்லா காலக்கட்டத்திலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த அணியாக விளங்கும் இந்திய அணி, தற்போது டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தில் உள்ளது. கோலி, புஜாரா, ரஹானே, முரளி விஜய் போன்ற தரமான பேட்ஸ்மேன்கள் மற்றும் அஸ்வின், ஜடேஜா ஆகிய உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் இந்திய அணி சிறந்த டெஸ்ட் அணியாக திகழ்கிறது.

இவ்வாறு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த அணியான இந்திய அணியுடன், தங்களது முதல் டெஸ்ட் போட்டியை ஆஃப்கானிஸ்தான் அணி ஆடுகிறது. வரும் 14ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. 

ஆஃப்கானிஸ்தான் அணியிலும் ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான், முகமது நபி போன்ற தரமான ஸ்பின்னர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் டெஸ்ட் போட்டியில் ஆடியதில்லை. இந்த போட்டிதான் அவர்களுக்கு முதல் போட்டி. ரஷீத், முஜீபுர் ஆகிய ஸ்பின் பவுலர்கள் உள்ள நம்பிக்கையில் இந்தியாவை எதிர்கொள்கிறது ஆஃப்கானிஸ்தான் அணி. 

ஸ்பின் பவுலிங்கை சிறப்பாக ஆடும் இந்திய பேட்ஸ்மேன்களை ஸ்பின்னர்களை வைத்தே வீழ்த்த ஆஃப்கானிஸ்தான் அணி திட்டமிட்டுள்ளது. இந்த போட்டி தொடர்பாக கருத்து தெரிவித்த ஆஃப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்ஸாய், இந்திய அணியை விட தங்களிடம் சிறந்த ஸ்பின்னர்கள் இருப்பதாக கருதுவதாக தெரிவித்தார். 

ஆஃப்கானிஸ்தான் கேப்டன் பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய இளம் வீரர் கருண் நாயர், இன்னும் டெஸ்ட் போட்டியில் விளையாடவே இல்லாத நிலையில், இந்திய அணியை விட சிறந்த ஸ்பின்னர்களை பெற்றிருப்பதாக கூறுவது, மிகைப்படுத்தப்பட்ட கருத்து. இந்திய அணி ஸ்பின்னர்கள், ஏற்கனவே பல தருணங்களில் அவர்களின் திறமையை நிரூபித்துள்ளார்கள். அதனால் இந்திய ஸ்பின்னர்களின் திறமை மற்றும் பெருமை குறித்து கூடுதலாக பேச தேவையில்லை என கருண் நாயர் தெரிவித்துள்ளார்.
 

click me!