குறைந்தது 25 பதக்கங்களை வெல்லும் இலக்குடன் பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய பாரா விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். போட்டிகள் முடிவதற்கு முன்பே இந்தியா இந்த இலக்கை எட்டியுள்ளது.
வியாழக்கிழமை பாராலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக ஜூடோவில் இந்தியா பதக்கம் வென்றது. ஆண்களுக்கான 60 கிலோ ஜே 1 பிரிவில் கபில் பர்மர் வெண்கலப் பதக்கம் வென்றார். வியாழக்கிழமை நடைபெற்ற வெண்கலப் பதக்கப் போட்டியில் பிரேசிலின் எலியட்டன் டெ ஒலிவீராவை எதிர்த்து வெறும் 33 வினாடிகளில் கபில் வெற்றி பெற்றார். 24 வயதான இந்த பாரா விளையாட்டு வீரர் 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அவரது வெண்கலப் பதக்க வெற்றியால் நடப்பு பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. அசாத்தியமான போராட்டத்திற்குப் பிறகு கபில் பதக்கம் வென்றார். அவரது இந்த சாதனை இந்தியாவின் பாரா விளையாட்டு வரலாற்றில் நீங்கா இடம்பிடிக்கும்.
பார்வை குறைபாட்டை மீறி பதக்கம் வென்ற கபில்
பாராலிம்பிக் போட்டிகளில் ஜே 1 பிரிவில் பங்கேற்கும் பாரா விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் பார்வைத்திறன் குறைவு. சிலருக்கு பார்வைத்திறன் முற்றிலும் இல்லை, மற்றவர்களுக்கு ஓரளவு பார்வைத்திறன் இருக்கும். இந்தப் பிரிவில் பங்கேற்கும் பாரா விளையாட்டு வீரர்கள், போட்டி தொடங்குவதற்கு முன், போட்டியின் போது, போட்டி முடிந்த பிறகு உதவி தேவைப்பட்டால் சிறப்பு சைகைகளைப் பயன்படுத்தலாம். 2022 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த முறை பாராலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கபில்
மத்தியப் பிரதேசத்தின் சேஹோரில் கபில் பிறந்தார். அவரது தந்தை ஒரு டாக்ஸி ஓட்டுநர். கபிலுக்கு நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி. சிறுவயதில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, தற்செயலாக தண்ணீர் பம்பில் கை பட்டு மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் கோமா நிலைக்கு சென்றார். குணமடைய நீண்ட நாட்கள் ஆனது. இந்த விபத்தின் காரணமாக கபிலின் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டது. இருப்பினும், பாரா ஜூடோவில் பயிற்சி பெறத் தொடங்கிய பிறகு, சர்வதேச அளவில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று வருகிறார் கபில். மேலும் பல சாதனைகளைப் படைப்பதே இந்த பாரா விளையாட்டு வீரரின் இலக்கு.