நானே செம டயர்டா இருந்தேன்.. கங்குலி அப்படி செய்வாருனு நெனச்சு கூட பார்க்கல!! 16 வருஷம் கழிச்சு கைஃப் பகிரும் சுவாரஸ்யம்

By karthikeyan VFirst Published Sep 4, 2018, 1:32 PM IST
Highlights

2002ம் ஆண்டு நடந்த நாட்வெஸ்ட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியை தான் வெற்றி பெற செய்தபிறகு நடந்த சம்பவம் குறித்து முகமது கைஃப் பகிர்ந்துள்ளார்.
 

2002ம் ஆண்டு நடந்த நாட்வெஸ்ட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியை தான் வெற்றி பெற செய்தபிறகு நடந்த சம்பவம் குறித்து முகமது கைஃப் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபீல்டராக வலம்வந்தவர் முகமது கைஃப். சர்வதேச கிரிக்கெட்டில் ஃபீல்டிங் என்றால் ஜாண்டி ரோட்ஸ் நினைவுக்கு வருவதுபோல, இந்திய அணியை பொறுத்தவரை கைஃபின் பெயர் தான் நினைவுக்கு வரும். அந்தளவிற்கு மிகச்சிறந்த ஃபீல்டர் கைஃப். 2000ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடினார் கைஃப். அதன்பிறகு இந்திய அணியில் ஆடவில்லை. எனினும் ஓய்வு அறிவிக்காமல் இருந்துவந்தார். இந்நிலையில் கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் கைஃப்.

கைஃபின் மிகச்சிறந்த ஆட்டங்களில் காலத்தால் மறையாத, ரசிகர்களால் மறக்கமுடியாத இன்னிங்ஸ் என்றால் அது, 2002ல் இங்கிலாந்தில் நடந்த நாட்வெஸ்ட் தொடரின் இறுதி போட்டியில் ஆடியது தான். இந்தியா, இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த அந்த முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. 

புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 325 ரன்களை குவித்தது. 326 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய 146 ரன்களுக்கே கங்குலி, டிராவிட், சச்சின், சேவாக், தினேஷ் மோங்கியா ஆகிய 5 விக்கெட்டுகளை இழந்தது. அந்த போட்டியில் யுவராஜ் சிங்குடன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்ததோடு, இறுதி வரை ஆட்டமிழக்காமல் கடைசி ஓவரில் திரில் வெற்றியை பெற்றுத்தந்தவர் முகமது கைஃப். இறுதி வரை ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெறச்செய்தார்.

இந்த வெற்றிக்கு பிறகுதான் கங்குலி டிஷர்ட்டை கழற்றி சுற்றி, வெற்றியை கொண்டாடியது. கைஃபின் பேட்டிங்கும் இந்திய அணியின் திரில் வெற்றியும் அதை கங்குலி கொண்டாடிய விதமும் என்றைக்குமே கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத சம்பவம். டிஷர்ட்டை கழற்றி சுற்றிய பின்னர், மைதானத்துக்குள் ஓடிவந்து, கைஃபின் மீது தாவிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினார் கங்குலி. 

மை நேஷன் ஆங்கில இணையதளத்துக்கு முகமது கைஃப் அளித்த பிரத்யேக பேட்டியில், நாட்வெஸ்ட் தொடரின் இறுதி போட்டியில் அடைந்த வெற்றி குறித்தும் கங்குலியின் கொண்டாட்டம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கைஃப், கங்குலி அப்படி கொண்டாடுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் ஒரு மிகப்பெரிய வீரர். எனது ரோல் மாடல் கங்குலி. அவரிடமிருந்து அப்படி ஒரு ரியாக்‌ஷனை எதிர்பார்க்கவில்லை.

நான் நீண்ட நேரம் களத்தில் நின்று ஆடியதால் மிகவும் கலைப்பாக இருந்தேன். அதிகமான சிங்கிள்கள் ஓடியதால் மிகவும் கலைப்படைந்திருந்தேன். ஏற்கனவே முதுகுவலி இருந்தது. அந்த நேரத்தில் கங்குலி ஓடிவந்து என்மீது தாவியதும் எனக்கு மேலும் வலித்தது. அவரது மொத்த வெயிட்டும் என் மீதுதான் இருந்தது என்றுகூறி சிரித்தார். பிறகு, ஜோக்ஸ் ஒருபுறம் இருக்க, கேப்டனின் அருமையான ரியாக்‌ஷன் அது. அவரது அந்த கொண்டாட்டம் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது என கைஃப் தெரிவித்துள்ளார்.
 

click me!