ஏங்க.. நான் உங்ககிட்ட வந்து சொன்னனா..? நீங்களா கிளப்பிவிடாதீங்க.. வார்னே மீது பாய்ந்த ஜோ ரூட்

By karthikeyan VFirst Published Oct 13, 2018, 12:02 PM IST
Highlights

இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கான கேப்டன்சியை ஜோஸ் பட்லரிடம் கொடுத்து, ரூட்டுக்கு இருக்கும் அழுத்தத்தை குறைத்தால், அவரால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற வார்னேவின் கருத்துக்கு ஜோ ரூட் பதிலடி கொடுத்துள்ளார். 
 

இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கான கேப்டன்சியை ஜோஸ் பட்லரிடம் கொடுத்து, ரூட்டுக்கு இருக்கும் அழுத்தத்தை குறைத்தால், அவரால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற வார்னேவின் கருத்துக்கு ஜோ ரூட் பதிலடி கொடுத்துள்ளார். 

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜோ ரூட் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பேற்ற ரூட்டின் கேப்டன்சியின் கீழ் இங்கிலாந்து அணி 21 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10 வெற்றிகளையும் 9 தோல்விகளையும் தழுவியுள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. 

விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு நிகரான தலைசிறந்த வீரராக ஜோ ரூட்டும் உள்ளார். ஆனால் அரைசதத்தை சதமாக மாற்றும் அவரது கன்வர்சன் ரேட் மிகவும் குறைவாக உள்ளது. விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 24 சதங்களும் 19 அரைசதங்களும் அடித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 23 சதங்களும் 24 அரைசதங்களும் அடித்துள்ளார். ஆனால் ரூட், 14 சதங்களும் 41 அரைசதங்களும் அடித்துள்ளார். 41 அரைசதங்களில் குறைந்தது பத்தையாவது சதமாக மாற்றியிருக்கலாம். ஆனால் ரூட் அதை செய்ய தவறியதால் கோலி, ஸ்மித்தை காட்டிலும் மிகவும் பின் தங்கியுள்ளார். 

அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்ற ரூட், கேப்டனாக பொறுப்பேற்ற முதல் டெஸ்ட் போட்டியிலேயே தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சதம் விளாசினார். ஆனால் அதன் பிறகு அண்மையில் இந்தியாவிற்கு எதிராக நடந்த ஓவல் டெஸ்டில் தான் சதம் விளாசினார். இடைப்பட்ட காலங்களில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மேலும் கேப்டனாவதற்கு முன் 52 ரன்கள் சராசரியை வைத்திருந்த ரூட், கேப்டனானதற்கு பிறகு 46 ரன்கள் தான் சராசரி வைத்துள்ளார். 

எனவேதான் கேப்டன்சி அழுத்தத்திலிருந்து ரூட்டை விடுவிப்பதன் மூலம் அவர் பேட்டிங்கில் சாதிக்க முடியும் என்று வார்னே கருத்து தெரிவித்திருந்தார். ரூட்டிற்கு பதிலாக ஜோஸ் பட்லரை இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கலாம் என்று வார்னே ஆலோசனை கூறினார். ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக வார்னே உள்ளார். அந்த அணியில்தான் பட்லர் ஆடினார். எனவே பட்லருடன் பழகியதன் அடிப்படையில் டெஸ்ட் அணிக்கு கேப்டனாகும் தகுதி பட்லருக்கு இருக்கிறது. எனவே இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக பட்லரை நியமித்து ரூட்டை அழுத்தத்திலிருந்து விடுவிக்கலாம் என்று வார்னே தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் வார்னேவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள ரூட், பட்லரும் வார்னேவும் நெருங்கிய தொடர்புடையவர்கள். மேலும் வார்னே பட்லரின் ரசிகரும் கூட. அதனால் வார்னே ஏன் அப்படி சொல்லியிருப்பார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஒரு கேப்டனாக என்னை நான் வளர்த்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்டுவருகிறேன். ஒரு அணியை வழிநடத்துவதற்கு யார் தகுதியான நபர் என்ற கேள்வி எழுவது இயல்புதான். எனக்கு தெரிந்து எனது கேப்டன்சி குறித்து ஒருவர் பேசுவது இதுதான் முதல்முறை. கேப்டனாக இருப்பதால் எனக்கு பிரச்னையில்லை, அது எனது ஆட்டத்தில் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக இருக்கிறோம். அதில் எனது ரோல் என்ன என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் என ரூட் பதிலடி கொடுத்துள்ளார். 
 

click me!