வழக்கமா செய்ற தவறை இந்திய அணி செய்யல.. இஷாந்த் சர்மாவின் வேகத்தில் சுருண்டது ஆஸ்திரேலியா!! பவுலிங்கில் அசத்திய ஹனுமா விஹாரி

By karthikeyan VFirst Published Dec 15, 2018, 10:19 AM IST
Highlights

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. 
 

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. 

முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி வென்ற நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்துவருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

இருவருமே நிதானமாக ஆடி அரைசதம் கடந்தனர். ஃபின்ச் அரைசதம் கடந்த மாத்திரத்திலேயே அவரை 50 ரன்களில் வெளியேற்றினார் பும்ரா. தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 112 ரன்களை குவித்தது. இதையடுத்து அந்த அணியின் நட்சத்திர வீரர் உஸ்மான் கவாஜா, வெறும் 5 ரன்னில் உமேஷ் யாதவின் வேகத்தில் வீழ்ந்தார். அரைசதம் கடந்து தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த மார்கஸ் ஹாரிஸை ஹனுமா விஹாரி 70 ரன்களில் வீழ்த்தினார். 

இதையடுத்து ஹேண்ட்ஸ்கம்ப், டிராவிஸ் ஹெட் ஆகியோரின் விக்கெட்டுகளை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். டிராவிஸ் ஹெட் இந்த இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். 58 ரன்களில் அவரை இஷாந்த் அவுட்டாக்கி அனுப்பினார். டிம் பெய்ன் மற்றும் பாட் கம்மின்ஸ் ஜோடி 7வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்த ஜோடிதான் களத்திலிருந்தது. 

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கியதும் கம்மின்ஸை உமேஷ் யாதவும் டிம் பெய்னை பும்ராவும் வீழ்த்தி பிரேக் கொடுத்தனர். இதையடுத்து ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட்டை இஷாந்த் சர்மா வீழ்த்தி முதல் இன்னிங்ஸை முடித்துவைத்தார். இங்கிலாந்தில் தொடங்கி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிவரை அந்த அணிகளின் பின்வரிசை வீரர்களை நீண்டநேரம் ஆடவிட்டு ரன்களை குவிக்கவிட்ட இந்திய அணி, இம்முறை அந்த தவறை செய்யவில்லை. 7வது விக்கெட்டுக்கு பிறகு மளமளவென விக்கெட்டுகளை சரித்தனர். 

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை சேர்த்துள்ளது. இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளையும் பும்ரா, உமேஷ், ஹனுமா விஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஸ்பின் பவுலரே இல்லாமல் ஹனுமா விஹாரியை மட்டும் நம்பி களமிறங்கிய இந்திய அணியை விஹாரி ஏமாற்றவில்லை. அவரது பங்கிற்கு அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இரண்டுமே முக்கியமான விக்கெட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. 70 ரன்கள் அடித்த மார்கஸ் ஹாரிஸையும் 45 ரன்கள் அடித்த ஷான் மார்ஷையும் ஹனுமா விஹாரி வீழ்த்தினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை இந்திய அணி ஆடிவருகிறது. 
 

click me!