
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நேற்று முன் தினம் தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 326 ரன்களை குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் சதம், ரஹானேவின் அரைசதம் ஆகியவற்றால் இந்திய அணி நல்ல நிலையில் இருந்தது. எனினும் மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை புரட்டிப்போட்டார் நாதன் லயன். லயனின் சுழலில் மளமளவென விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 283 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்தது.
43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச் மற்றும் மார்கஸ் ஹாரிஸை வழக்கம்போலவே இஷாந்த் சர்மாவும் பும்ராவும் வேகத்தில் மிரட்டினர். எனினும் தட்டுத்தடுமாறி விக்கெட்டை பறிகொடுக்காமல் இருவரும் இணைந்து மூன்றாம் நாள் டீ பிரேக் வரை 33 ரன்களை சேர்த்துவிட்டனர்.
இரண்டாம் இன்னிங்ஸில் இஷாந்த் சர்மா வீசிய 5வது ஓவரின் மூன்றாவது பந்தில் மார்கஸ் ஹாரிஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை புஜாரா தவறவிட்டார். அவுட்சைட் எட்ஜாகி முதல் ஸ்லிப்பில் நின்ற புஜாராவிடம் சென்ற பந்தை புஜாரா பிடிக்க தவறியதால் ஹாரிஸ் தப்பினார்.
இதையடுத்து மீண்டும் இஷாந்த் சர்மா வீசிய 7வது ஓவரின் 5வது பந்தில் ஃபின்ச் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரிஷப் பண்ட் தவறவிட்டார். இஷாந்த் சர்மா ஃபின்ச்சுக்கு சர்ப்ரைசாக லெக் திசையில் ஒரு பவுன்ஸரை வீசினார். அதை ஃபின்ச் அடிக்க, பந்து பின்னால் சென்றது. அதை ரிஷப் பண்ட் பிடித்திருக்கலாம், ஆனால் தவறவிட்டார்.
இவ்வாறு தொடக்க வீரர்கள் இருவரையுமே வீழ்த்தும் வாய்ப்பை இஷாந்த் வழங்கினார். ஆனால் புஜாராவும் ரிஷப் பண்ட்டும் போட்டி போட்டுக்கொண்டு கேட்ச்களை விட்டதால், இந்திய அணி இன்னும் முதல் விக்கெட்டை வீழ்த்தவில்லை. இதன் விளைவு எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.