இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆனார் பாரத் அருண்; ரவி சாஸ்திரியின் கோரிக்கை நிறைவேற்றம்…

First Published Jul 19, 2017, 9:27 AM IST
Highlights
Indias bowling coach Bharat Arun Ravi Shastri demands are fulfilled ...


இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாரத் அருண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த நியமனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய அணியின் பந்துவீச்சு ஆலோசகராக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கானை பிசிசிஐ நியமித்தது. பின்னர், வெளிநாடுகளில் நடைபெறும் குறிப்பிட்ட போட்டிகளுக்கு மட்டும் அவர் ஆலோசகராக செயல்படுவார் என்று விளக்கமளித்தது.

அதேவேளையில், வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக ராகுல் திராவிட் செயல்படுவார் என்று அறிவித்தது.

இந்த நிலையில், ரவி சாஸ்திரியின் கோரிக்கையின் பேரில் பாரத் அருண் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐ நிர்வாகக் குழு (சிஓஏ), பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா, செயலர் அமிதாப் செளதரி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ரவி சாஸ்திரி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிசிசிஐ செயலர் அமிதாப் செளதரி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது:

“இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பாரத் அருண், உதவிப் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் நியமிக்கப்படுகின்றனர்.

அதேபோல், அணியின் இயன்முறை மருத்துவராக (ஃபிஸியோதெரபிஸ்ட்) பேட்ரிக் ஃபர்ஹாத் தொடருவார்.

இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள இவர்கள், 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வரையில் நீடிப்பார்கள்” என்று அவர் கூறினார்.

இதுகுறித்து, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியது:

“எனக்கான பயிற்சியாளர் குழு எப்படி அமைய வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவே, எனக்கான குழுவாகும்.

ராகுல் திராவிட் மற்றும் ஜாகீர் கானுடன் தொடர்பில் உள்ளேன். அவர்கள் 3-4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே இப்போதும் நல்ல கிரிக்கெட்டர்களாக உள்ளனர். அவர்களது ஆலோசனைகள் விலைமதிப்பிட முடியாத ஒன்று. அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்களும் குழுவில் இணைவார்கள். அவர்கள் எவ்வளவு தூரம் அணுகக் கூடிய வகையில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அடுத்த நடவடிக்கைகள் இருக்கும்” என்று ரவி சாஸ்திரி கூறினார்.

ரவி சாஸ்திரி இந்திய அணியின் இயக்குநராக இருந்த காலத்தில், பாரத் அருண் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

tags
click me!