தகுதி நீக்கம் சரி தான் - வினேஷ் போகத்திற்கு நீதிமன்றம் அளித்த அதிர்ச்சி தீர்ப்பு!

By Rsiva kumarFirst Published Aug 19, 2024, 9:45 PM IST
Highlights

பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், நீதிமறத்தில் அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 24 பக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாகவும், வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரியும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் செய்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வந்த 33ஆவது ஒலிம்பிக் தொடரானது ஆகஸ்ட் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

கடைசியாக ஒலிம்பிக் கொடியானது லாஸ் ஏஞ்சல்ஸிற்கு வழங்கப்பட்டது. இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் மகளிருக்கான மல்யுத்தம் 50கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட வினேஷ் போகத் எலிமினேஷன் சுற்று, காலிறுதி, அரையிறுதி என்று எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Latest Videos

அடுத்தநாள் நடைபெற இருந்த இறுதிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றிருந்தால் கையில் தங்கப் பதக்கம் இருந்திருக்கும். ஆனால், இறுதிப் போட்டிக்கு முன்னதாக, கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற உடல் எடை பரிசோதனையில் 50 கிலோவை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அவருக்கு எந்த பதக்கமும் கிடைக்காமல் போனது. இச்சம்வம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் சினிமா, அரசியல் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். வினேஷ் போகத் தன் உடல் எடையை குறைக்க இரவு முழுவதும் உடற்பயிற்சி செய்திருக்கிறார். அதுவும் பலனளிக்காததால் அவரது முடியை வெட்டியும், ஆடையை குறைத்தும் பார்த்துள்ளனர். அதுவும் பலனளிக்கவிலை என கூறப்படுகிறது.

வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து கடந்த 7 ஆம் தேதி விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று அதற்கான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்த வினேஷ் போகத்தின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது தொடரான 24 பக்கம் கொண்ட அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த 24 பக்கம் கொண்ட அறிக்கையில் இதுவரையில் நடைபெற்று வந்த விசாரணை மற்றும் வினேஷ் போகத்தின் தரப்பு விளக்கம் ஆகியவை அடங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி வந்த வினேஷ் போகத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!