இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் சர்வதேச தரத்திலான வீராங்கனைகள் இருக்கிறார்கள் – கேப்டன் பெருமிதம்…

First Published Jul 22, 2017, 11:40 AM IST
Highlights
Indian womens cricket team has international standards - Captain Pride ...


இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் சர்வதேச தரத்திலான வீராங்கனைகள் இருக்கிறார்கள் என்று மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.

வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மிதாலி ராஜ் கூறியது:

“இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருப்பதால் எங்கள் வீராங்கனைகள் மிகுந்த உற்சாகமாக உள்ளனர். உலகக் கோப்பை போட்டி கடும் சவாலாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் பேட்ஸ்மேன்களும் சரி, பெளலர்களும் சரி சூழலுக்கு ஏற்றவாறு தேவையான நேரத்தில் சிறப்பாக ஆடி வெற்றி தேடித் தந்தனர்.

இறுதி ஆட்டம் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எளிதாக இருக்காது. எனினும் போட்டி நடைபெறும் நாளில் எந்த அணி சிறப்பாக ஆடுகிறது என்பதைப் பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும்.

முதல் ஆட்டத்தில் எங்களிடம் தோல்வி கண்ட இங்கிலாந்து அணி, அதன்பிறகு அபாரமாக ஆடி வருகிறது. எனவே இறுதி ஆட்டத்திற்கு சரியான திட்டங்களை வகுத்து அதை சிறப்பாக செயல்படுத்துவது அவசியமாகும்.

இங்கிலாந்து அணி சிறப்பாக ஆடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. ஆனால் சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது அந்த அணிக்கு சவாலாக இருக்கும்.

ஹர்மன்பிரீத் கெளரின் ஆட்டம் மிக அற்புதமாக இருந்தது. எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஜூலான் கோஸ்வாமி தனது பழைய ஃபார்முக்கு வந்திருக்கிறார். ஷிகா பாண்டேவும் சிறப்பாக பந்துவீசி வருகிறார். எங்களுடைய சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான குரூப் சுற்றில் தோற்ற நிலையில், அதன்பிறகு நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆகியவற்றில் வெற்றி கண்டது மிகப்பெரிய சாதனையாகும். எங்கள் அணியில் சர்வதேச தரத்திலான வீராங்கனைகள் இருக்கிறார்கள்' என்று அவர் கூறினார்.

tags
click me!