ஆண்கள் அணி மட்டுமல்ல.. நாங்களும் கெத்துதான்!! நியூசிலாந்தில் நிரூபித்து காட்டிய இந்திய மகளிர் அணி

By karthikeyan VFirst Published Jan 24, 2019, 4:37 PM IST
Highlights

இந்தியாவில் கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுகளுக்கு பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அதிலும் ஆண்கள் அணிக்குத்தான் முக்கியத்துவமே தவிர மகளிர் அணி கண்டுகொள்ளப்படுவதில்லை. 

இந்தியாவில் கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுகளுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. கிரிக்கெட்டுக்குத்தான் ரசிகர்களும் அதிகமான உள்ளனர் என்பதால் மிகப்பெரிய வியாபாரமாகிவிட்டது கிரிக்கெட். அதிலும் ஆண்கள் கிரிக்கெட்டுக்குத்தான் முக்கியத்துவம். பெண்கள் கிரிக்கெட்டையும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. 

இந்நிலையில், பெண்கள் அணியும் அவ்வப்போது நாங்களும் திறமைசாலிகள் என்று சில வெற்றிகளின் மூலம் உரக்க சொல்லிவருகின்றனர். இந்திய ஆண்கள் அணி மற்றும் மகளிர் அணி ஆகிய இரண்டு அணிகளுமே நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 

இதில் நேப்பியரில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி, வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியின் மீது ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செலுத்தி எளிதாக வெற்றியை பறித்தது. சொந்த மண்ணில் கெத்தான நியூசிலாந்து அணியை வெறும் 157 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து, அந்த இலக்கை எளிதாக எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது. 

இந்நிலையில், கோலி படை பெற்ற வெற்றியை விட பெரிய வெற்றியை பெற்றுள்ளது இந்திய மகளிர் அணி. இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று அதே நேப்பியரில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து மகளிர் அணி, 49 ஓவரில் 192 ரன்களுக்கு சுருண்டது. 

193 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணியின் தொடக்க ஜோடி ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகிய இருவரும் அபாரமாக ஆடினர். தொடக்க ஜோடியையே பிரிக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறியது. அபாரமாக ஆடி சதமடித்த மந்தனா, 104 பந்துகளில் 105 ரன்கள் குவித்து வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆட்டமிழந்தார். ஒரே விக்கெட்டை மட்டுமே இழந்த இந்திய அணி, 33 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. ஜெமிமா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 81 ரன்களை குவித்திருந்தார். 

இந்திய ஆண்கள் அணி, நேற்று நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்த நிலையில், இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதை விட பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. 
 

click me!