எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி…

First Published Nov 30, 2016, 12:05 PM IST
Highlights


இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை அபாரமாக வெற்றிப் பெற்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய அணி 2 வெற்றிகளுடன் தற்போது முன்னிலை வகிக்கிறது.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மொஹாலியில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 93.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ஓட்டங்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 89 ஓட்டங்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 138.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 417 ஓட்டங்கள் குவித்தது. இந்தியத் தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 170 பந்துகளுக்கு 10 பவுண்டரி, ஒர் சிக்ஸருடன் 90 ஓட்டங்கள் விளாசினார்.

இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் 134 ஓட்டங்கள் பின்தங்கிய இங்கிலாந்து அணி, 3-ஆம் நாளான திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் 38 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 78 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், 4-ஆவது நாள் ஆட்டத்தை ஜோ ரூட் 36 ஓட்டங்களுடனும், கேரத் பட்டி ஓட்டங்கள் ஏதுமின்றியும் தொடங்கினர்.

இதில் 7 பந்துகளை மட்டுமே சந்தித்த பட்டி, ஓட்டங்கள் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து ஜோஸ் பட்லர் களமிறங்க, மறுமுனையில் 147 பந்துகளில் அரைசதம் கடந்தார் ஜோ ரூட்.

ஜோஸ் பட்லர் 18 ஓட்டங்களில் நடையைக் கட்டினார். அடுத்து வந்த ஹசீப் ஹமீது சற்று நிலைத்து ஆடினார். ஜோ ரூட் 78 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். கிறிஸ் வோக்ஸ் 30, ஆண்டர்சன் 5 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஆதில் ரஷீத் டக் அவுட் ஆனார்.

90.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 236 ஓட்டங்கள் எடுத்தது இங்கிலாந்து. ஹசீப் ஹமீது 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்தியத் தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து, 103 ஓட்டங்கள் இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி. இதில் முரளி விஜய் ரன்கள் ஏதும் இன்றியும், புஜாரா 25 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

பார்த்திவ் படேல் அரைசதம் கடந்து 67 ஓட்டங்கள் அடித்து, அணியை வெற்றிக்கு வழி நடத்தினார். இந்திய அணி 20.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 104 ஓட்டங்கள் எடுத்து வெற்றி கண்டது. பார்த்திவ் படேலுன் கேப்டன் கோலி (6 ஓட்டங்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

முதல் இன்னிங்ஸில் 90 ஓட்டங்கள் விளாசிய ஜடேஜா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

tags
click me!