நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jan 26, 2019, 2:49 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, தொடக்க ஜோடியான ரோஹித் - தவான் அமைத்து கொடுத்த நல்ல அடித்தளத்தால், 50 ஓவர் முடிவில் 324 ரன்களை குவித்தது.

325 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க தவறிவிட்டனர். கடந்த போட்டியை போலவே இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர்.

கப்டில் 15 ரன்களில் புவனேஷ்வர் குமாரின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் முன்ரோவுடன் ஜோடி சேர்ந்த வில்லியம்சன், ஷமியின் பவுலிங்கில் போல்டாகி 20 ரன்களில் வெளியேறினார். முன்ரோ 31 ரன்களில் சாஹலின் பந்தில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து நான்காவது விக்கெட்டாக அந்த அணியின் அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிவந்த டெய்லரை, தனது அபாரமான விக்கெட் கீப்பிங் திறமையால் மிகவும் நுணுக்கமாக ஸ்டம்பிங் செய்து அனுப்பினார் தோனி. 

அதன்பிறகு டாம் லதாம், கோலின் டி கிராண்ட்ஹோம், நிகோல்ஸ் ஆகிய மூவரையும் குல்தீப் யாதவ் வீழ்த்தினார். 166 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நியூசிலாந்து அணியின் பின்வரிசை வீரரான பிரேஸ்வெல், இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்கிற ரீதியாக அடித்து ஆடினார். சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக விளாசி அரைசதம் கடந்தார். 9வது விக்கெட்டுக்கு இந்திய அணியை தெறிக்கவிட்டார் பிரேஸ்வெல். 

எனினும் 57 ரன்களில் அவரை புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார். கடைசி விக்கெட்டாக ஃபெர்குசனை சாஹல் வீழ்த்தினார். நியூசிலாந்து அணி 40.2 ஓவரில் 234 ரன்களுக்கே ஆல் அவுட்டானதை அடுத்து, இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.  
 

click me!