4 பந்தில் 18 ரன்கள்.. 5வது பந்தில் அவுட்!! அடித்து நொறுக்கிய வில்லியம்சனை போல்டாக்கி அனுப்பிய ஷமி

By karthikeyan VFirst Published Jan 26, 2019, 12:47 PM IST
Highlights

3 வாய்ப்புகளையும் பயன்படுத்தி, அதன்பிறகு சுதாரிப்பாக ஆடி ரன்களை குவிக்காமல், நான்காவது வாய்ப்பையும் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார் கப்டில். புவனேஷ்வர் குமார் வீசிய பவுன்ஸரில் சாஹலிடம் கேட்ச் கொடுத்து 15 ரன்களில் கப்டில் நடையை கட்டினார். 

தனது ஓவரில் ஓவராக அடித்து ஆடிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை அதே ஓவரில் அவுட்டாக்கி அனுப்பினார் முகமது ஷமி.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, தொடக்க ஜோடியான ரோஹித் - தவான் அமைத்து கொடுத்த நல்ல அடித்தளத்தால், 50 ஓவர் முடிவில் 324 ரன்களை குவித்தது.

சொந்த மண்ணில் 325 ரன்கள் என்பது நியூசிலாந்து அணிக்கு கடினமான இலக்கு அல்ல. மார்டின் கப்டில் - கோலின் முன்ரோ ஆகிய இருவரும் களமிறங்கினர். முதல் பந்திலேயே மார்டின் கப்டிலை ரன் அவுட் ஆக்கியிருக்கலாம். ஆனால் ராயுடு தவறவிட்டார். அதன்பிறகு கப்டிலின் கேட்ச்சை விக்கெட் கீப்பர் தோனி தவறவிட்டார். 2 வாய்ப்புகளை பெற்ற கப்டில், ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த ரோஹித்திடமும் ஒரு கேட்ச் கொடுத்தார். ஆனால் அந்த பந்து சற்று முன் பிட்ச் ஆகியதால் தப்பினார் கப்டில்.

3 வாய்ப்புகளையும் பயன்படுத்தி, அதன்பிறகு சுதாரிப்பாக ஆடி ரன்களை குவிக்காமல், நான்காவது வாய்ப்பையும் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார் கப்டில். புவனேஷ்வர் குமார் வீசிய பவுன்ஸரில் சாஹலிடம் கேட்ச் கொடுத்து 15 ரன்களில் கப்டில் நடையை கட்டினார். 

இதையடுத்து முன்ரோவுடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக தொடங்கிய வில்லியம்சன், ஷமி வீசிய 8வது ஓவரை அடித்து ஆடினார். அந்த ஓவரின் முதலிரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் விளாசிய வில்லியம்சன், மூன்றாவது பந்தில் பவுண்டரியும் நான்காவது பந்தில் 2 ரன்களும் அடித்தார். 4 பந்துகளில் 18 ரன்களை குவித்தார். அந்த ஓவரில் ஆதிக்கம் செலுத்திய வில்லியம்சன், ஐந்தாவது பந்தையும் அடிக்க நினைத்து விக்கெட்டை பறிகொடுத்தார். 

ஷமி, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய ஐந்தாவது பந்தை அடித்து ஆட முயன்றார் வில்லியம்சன். ஆனால் பந்து, இன்சைட் எட்ஜாகி போல்டானது. இதையடுத்து 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வில்லியம்சன் ஆட்டமிழந்தார். 

2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது நியூசிலாந்து அணி. வில்லியம்சனின் விக்கெட்டுக்கு பிறகு முன்ரோவுடன் ரோஸ் டெய்லர் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 
 

click me!