
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 127.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 536 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் சனிக்கிழமை தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்து முதல்நாள் முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 371 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
முன்னதாக தொடக்க வீரர் முரளி விஜய் 155 ஓட்டங்கள் விளாசினார். தவன், புஜாரா தலா 23 ஓட்டங்களிக்கு ஆட்டமிழக்க, ரஹானே ஒரு ஓட்டம் எடுத்து வீழ்ந்தார். கோலி அருமையாக ஆடி சதம் கடந்தார்.
இந்த நிலையில், 2-வது நாளான நேற்று கோலி 156 ஓட்டங்கள், ரோஹித் சர்மா 6 ஓட்டங்களுடன் தொடங்கினர். நிதானமாக ஆடிவந்த கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 6-வது இரட்டைச் சதத்தை எட்டினார். அதனை அவர் 238 பந்துகளில் 20 பவுண்டரிகளுடன் எடுத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ரோஹித் சர்மா 88 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் அரைசதம் கடந்து 65 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சன்டகன் பந்துவீச்சில் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அஸ்வின் 4 ஓட்டங்களில் பெவிலியன் திரும்ப, மறுமுனையில் நிலைத்து நின்ற கோலி நிதானமாக ஓட்டங்கள் சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் 287 பந்துகளில் 25 பவுண்டரிகளுடன் 243 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் சன்டகன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார்.
கோலியைத் தொடர்ந்து ஜடேஜா களம் காண, சிறிது நேரத்தில் டிக்ளேர் செய்வதாக இந்திய அணி அறிவித்து. அப்போது அணியின் ஸ்கோர் 127.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 536 ஓட்டங்களாக இருந்தது.
சாஹா 9 ஓட்டங்கள், ஜடேஜா ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை தரப்பில் சன்டகன் அதிகபட்சமாக 4 விக்கெட்கள், கமகே 2 விக்கெட்கள், பெரேரா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை, நேற்றைய முடிவில் 44.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 57 ஓட்டங்கள், கேப்டன் சண்டிமல் 25 ஓட்டங்களுடன் ஆடி வருகின்றனர்.
தொடக்க வீரர் கருணாரத்னே முதல் பந்திலேயே அவுட் ஆக, உடன் வந்த தில்ருவன் பெரேரா 42 ஓட்டங்களுக்கு நிலைத்தார். அடுத்து வந்த தனஞ்ஜெய டி சில்வா ஒரு ரன்னில் நடையைக் கட்டினார்.
இந்திய தரப்பில் முகமது சமி, இஷாந்த் சர்மா, ஜடேஜா தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இலங்கை இன்னும் 405 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் அந்த அணியின் வசம் 7 விக்கெட்டுகள் உள்ளன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.