
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 77 ஓவர்களில் 187 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் பெரும்பாலான விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ முதல் நாளே தனது ஆட்டத்தை முடித்துக் கொண்டது இந்தியா.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா முதல் 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், 3-வது போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.
அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜய் - லோகேஷ் ராகுல் களம் கண்டனர். இதில் 3-வது ஓவரிலேயே லோகேஷ் ராகுல் டக் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து புஜாரா களம் காண, தொடக்க வீரர் முரளி விஜய் 8 ஓட்டங்களுக்கு 8-வது ஓவரில் வீழ்ந்தார்.
அடுத்து வந்த கேப்டன் கோலி, புஜாராவுடன் இணைந்தார். இந்த ஜோடி விக்கெட் சரிவை தடுத்து அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தியது.
மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் கோலி 101 பந்துகளில் 9 பவுண்டரிகள் உள்பட அரைசதம் எட்டினார். எனினும், அவர் 54 ஓட்டங்களை எட்டியபோது என்.கிடி பந்துவீச்சில் டி வில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கோலி - புஜாரா பார்ட்னர்ஷிப் 3-வது விக்கெட்டுக்கு 84 ஓட்டங்கள் சேர்த்தது. 45.4 ஓவர்களில் 100 ஓட்டங்களை எட்டியது இந்தியா.பின்னர் புஜாராவும் 8 பவுண்டரிகள் உள்பட 50 ஓட்டங்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
பின்னர் வந்தவர்களில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்த புவனேஷ்வர் குமார் மட்டும் 4 பவுண்டரிகள் உள்பட 30 ஓட்டங்கள் எடுத்தார். முன்னதாக ரஹானே 9 ஓட்டங்கள், பார்த்திவ் படேல் 2 ஓட்டங்கள் , ஷமி 8 ஓட்டங்களில் வெளியேற, ஹார்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா டக் அவுட் ஆகினர். பும்ரா ஓட்டங்கள் இன்றி அவுட்டானார்கள்.
தென் ஆப்பிரிக்க தரப்பில் ககிசோ ரபாடா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், மோர்னே மோர்கெல், பிலாண்டர், பெலுக்வாயோ தலா 2 விக்கெட்டுகளும், கிடி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, முதல்நாள் முடிவில் 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 6 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
டீன் எல்கர் 4 ஓட்டங்களுடனும், ரபாடா ஓட்டங்கள் இன்றியும் ஆடி வருகின்றனர்.
மார்க்ரம் 2 ஓட்டங்களில் வீழ்ந்தார். அவரை, கீப்பர் பார்த்திவ் படேல் உதவியுடன் புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.