
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று, ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இலங்கை அணியால் கைப்பற்ற முடிந்தது.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, அஸ்வின், ஜடேஜாவின் சுழல் மற்றும் இஷாந்த் சர்மாவின் வேகத்தை சமாளிக்க முடியாமல் 205 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு, 7 ரன்களில் அவுட்டாகி ராகுல் அதிர்ச்சி அளித்தார். இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.
களத்தில் இருந்த முரளி விஜயும் புஜாராவும் இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் அணியில் தனக்கு கிடைத்த இடத்தை சரியாக பயன்படுத்திய முரளி விஜய், சதமடித்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாவது சதத்தை பூர்த்தி செய்த முரளி விஜய், 128 ரன்கள் எடுத்திருந்தபோது ஹெராத்தின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இதையடுத்து புஜாராவுடன் கேப்டன் கோலி கைகோர்த்தார். களமிறங்கியதிலிருந்தே அதிரடியாக ஆடி கோலி ரன் குவிப்பில் ஈடுபட, மறுமுனையில் புஜாராவும் சதமடித்தார். நிதானமாக ஆடிய புஜாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14வது சதத்தை பூர்த்தி செய்தார்.
அதிரடியாக ஆடி ரன்களை குவித்த கேப்டன் கோலியும் அரைசதம் கடந்தார். இன்றைய ஆட்டநேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்திருந்தது. இலங்கையைவிட இந்திய அணி, 107 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இன்று ஒருநாள் முழுக்க 90 ஓவர்கள் வீசிய இலங்கை அணி, முரளிவிஜயின் விக்கெட்டை மட்டுமே எடுத்தது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.