அடுத்தடுத்த சதங்கள்.. அசத்தலாக ஆடும் இந்தியா..! அரண்டுபோன இலங்கை..!

First Published Nov 25, 2017, 4:07 PM IST
Highlights
india well play in second test pujara century


முரளி விஜயைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய புஜாராவும் சதமடித்து அசத்தினார்.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, அஸ்வின், ஜடேஜாவின் சுழல் மற்றும் இஷாந்த் சர்மாவின் வேகத்தை சமாளிக்க முடியாமல் 205 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு, 7 ரன்களில் அவுட்டாகி ராகுல் அதிர்ச்சி அளித்தார். இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.

களத்தில் இருந்த முரளி விஜயும் புஜாராவும் இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் அணியில் தனக்கு கிடைத்த இடத்தை சரியாக பயன்படுத்திய முரளி விஜய், சதமடித்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாவது சதத்தை பூர்த்தி செய்த முரளி விஜய், 128 ரன்கள் எடுத்திருந்தபோது ஹெராத்தின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இதையடுத்து புஜாராவுடன் கேப்டன் கோலி கைகோர்த்தார். களமிறங்கியதிலிருந்தே அதிரடியாக ஆடி கோலி ரன் குவிப்பில் ஈடுபட, மறுமுனையில் புஜாராவும் சதமடித்தார். நிதானமாக ஆடிய புஜாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14வது சதத்தை பூர்த்தி செய்தார்.

கோலி அரைசதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறார். இதுவரை 270 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி, இலங்கையை விட 65 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 
 

click me!