'இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் நடப்பதில் சிக்கல்' - குழப்பத்தில் பிசிசிஐ

First Published Nov 7, 2016, 4:04 AM IST
Highlights


இந்தியா-இங்கிலாந்து தொடர் நடக்குமா என்பது குறித்து சந்தேகத்தினைக் கிளப்பியுள்ளார் பிசிசிஐ செயலாளர் அஜய் ஷிர்கே.

இதுகுறித்து பேசிய அவர், கிரிக்கெட் தொடருக்காக வீரர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களை பிசிசிஐ மேற்கொள்ள வேண்டும். ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, லோதா கமிட்டியின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு ஒப்பந்தத்தையும் பிசிசிஐயால் போட முடியாது என்று தெரிவித்தார். மேலும், இதுதொடர்பான தகவல்கள் அனைத்தும் லோதா கமிட்டியிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஷிர்கே தெரிவித்துள்ளார். லோதா கமிட்டியின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்க முடியாது என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இந்தியா-இங்கிலாந்து தொடர் திட்டமிட்டபடி ராஜ்கோட்டில் நவம்பர் 9-ல் தொடங்கும் என்று சவுராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. முன்னதாக, டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணியினரின் ஹோட்டல் செலவுகள் உள்ளிட்ட செலவுகளை ஏற்குமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தினை பிசிசிஐ கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இதனை ஏற்றுக் கொண்டாலும் பல்வேறு காரணங்களால் டெஸ்ட் தொடர் திட்டமிட்டபடி தொடங்குமா என்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.

click me!