இந்தியா – இங்கிலாந்து மூன்றாவது முறையாக இன்று மோதுகிறது…

First Published Nov 26, 2016, 11:48 AM IST
Highlights


ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3-ஆவது போட்டியில் இந்தியா - இங்கிலாந்து மொஹாலியில் இன்று மோதுகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டதன் மூலம் இந்தத் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி, வெற்றியைத் தொடரும் முனைப்பில் இந்தப் போட்டியில் களம் காணுகிறது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்குகிறது.

கடந்தப் போட்டியில் விளையாடிய இந்திய விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா காயம் காரணமாக விலகியிருப்பதால் பார்த்திவ் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். இவர், 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். மற்றபடி அணியில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் கேப்டன் கோலி முதுகெலும்பாகத் திகழ்கிறார். அவர் ஒரு சதம், ஓர் அரை சதம் உள்பட 337 ரன்கள் குவித்துள்ளார். அவரின் அசத்தல் ஆட்டம் இந்தப் போட்டியிலும் தொடரும் என நம்பலாம். கோலியை விரைவாக வீழ்த்துவதற்காக வியூகம் வகுத்துள்ளதாக இங்கிலாந்து அணி தெரிவித்துள்ளது. ஆனால் அது கோலியிடம் பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதேபோல் தொடக்க வீரர் முரளி விஜய், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சேதேஷ்வர் புஜாரா ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். புஜாரா இந்தத் தொடரில் இரு சதங்களையும், விஜய் ஒரு சதத்தையும் விளாசியுள்ளனர்.

புஜாரா 262 ஓட்டங்களையும், விஜய் 180 ஓட்டங்களையும் குவித்துள்ளனர்.

மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுல் கடந்த போட்டியில் சோபிக்கவில்லை. அந்த குறையை அவர் இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி தீர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் மற்றொரு முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அஜிங்க்ய ரஹானே தொடர்ந்து தடுமாறி வருவது கவலையளிப்பதாக உள்ளது.

வேகப்பந்து வீச்சில் உமேஷ் யாதவ், முகமது சமி ஆகியோரும், சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ் ஆகியோரும் பலம் சேர்க்கின்றனர். கடந்தப் போட்டியில் அபாரமாக பந்துவீசிய அஸ்வின், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மொஹாலி மைதானத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் மோசமான ஃபார்ம் மற்றும் உடற்தகுதி பிரச்னை காரணமாக 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பென் டக்கெட்டுக்கு பதிலாக ஜோஸ் பட்லரும், காயமடைந்த ஸ்டூவர்ட் பிராடுக்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸும், ஜாபர் அன்சாரிக்குப் பதிலாக கேரத்தும் இடம்பெறுகிறார்கள்.

பேட்டிங்கில் கேப்டன் குக், ஹஸீப் ஹமீது, ஜோ ரூட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இதுதவிர ஜோஸ் பட்லரின் வருகை அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்குக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. கடந்த ஓர் ஆண்டில் ஒரேயொரு முதல்தர போட்டியில் மட்டுமே ஜோஸ் பட்லர் விளையாடியுள்ளார். எனினும் ஒரு நாள் போட்டிகளில் அவர் சிறப்பாக ஆடியிருப்பதன் காரணமாக அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சில் ஆண்டர்சன், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும், சுழற்பந்து வீச்சில் ஆதில் ரஷித், மொயீன் அலி, கேரத் பட்டி ஆகியோரும் பலம் சேர்க்கின்றனர்.

tags
click me!