அசத்தல் பவுலிங்.. அபார வெற்றி..! ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் ஹைதராபாத்

First Published Apr 27, 2018, 10:15 AM IST
Highlights
hyderabad defeats punjab


133 ரன்கள் என்ற எளிய இலக்கை எட்டவிடாமல் பஞ்சாப் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 11வது சீசனின் 25வது போட்டி பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான ஷிகர் தவன் 11 ரன்களிலும் கேப்டன் வில்லியம்சன் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சஹாவும் 6 ரன்களில் வெளியேறினார். 27 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை ஹைதராபாத் அணி இழந்த நிலையில், மனீஷ் பாண்டேவும் ஷாகிப் அல் ஹாசனும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். 

மனீஷ் பாண்டேவின் கேட்ச் வாய்ப்பை அஸ்வினும் ஆண்ட்ரூ டையும் அடுத்தடுத்து தவறவிட்டனர். ஷாகிப் அல் ஹாசனுக்கு ஒரு கேட்ச் பிடிக்கப்பட்டது. அதுவும் நோ-பாலானது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். ஷாகிப் 28 ரன்களில் அவுட்டானார்.

மனீஷ் பாண்டே தட்டுத்தடுமாறி அரைசதம் கடந்தார். யூசுப் பதானும் தனது பங்கிற்கு நிதானமாக ஆடி ரன்களை சிறிது சிறிதாக சேர்த்தனர். 20 ஓவரின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 132 ரன்கள் எடுத்தது.

133 ரன்கள் என்ற எளிய இலக்குடன் கெய்லும் ராகுலும் களமிறங்கினர். இருவரும் தங்கள் பங்கிற்கு ரன்களை சேர்த்தனர். ராகுல் 32 ரன்களிலும் கெய்ல் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதன்பிறகு களமிறங்கிய அகர்வாலும் கருண் நாயரும் 12 மற்றும் 13 ரன்களில் வெளியேறினர். அதன்பிறகு களத்திற்கு வந்த பின்ச், மனோஜ் திவாரி, அஸ்வின், ஆண்ட்ரூ டை, ஸ்ரான் அனைவரும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.

பேட்ஸ்மேன்களே அடிக்க தயங்கும் ரஷீத் கானின் சுழலில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசி முஜீபுர் ரஹ்மான் வியக்கவைத்தார். எனினும் 19.2 ஓவருக்கு 119 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பஞ்சாப் அணி ஆல் அவுட்டானது.

13 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. 10 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணி மூன்றாமிடத்தில் உள்ளது. சென்னை அணி முதலிடத்தில் உள்ளது.

எவ்வளவு குறைவான ரன்கள் எடுத்தாலும் அந்த ரன்களை கூட எட்டவிடாமல் எதிரணியை சுருட்டி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுவருகிறது. இக்கட்டான சூழலிலும் அணியையும் பவுலர்களையும் சிறப்பாக கையாண்டு வெற்றியை வசப்படுத்துகிறார் வில்லியம்சன். பேட்டிங்கில் வலுவாக திகழும் மும்பை அணியை 119 ரன்களை எட்டவிடாமலும் கெய்ல், ராகுல் போன்ற வீரர்கள் இருக்கும் பஞ்சாப் அணியை 133 என்ற எளிய இலக்கை எட்டவிடாமலும் வெற்றி பெற்று ஹைதராபாத் அணி அசத்திவருகிறது. 

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ராஜ்பூட் தேர்வு செய்யப்பட்டார்.
 

click me!