ஐபிஎல் 2019 ஏலம்: அதிக விலைக்கு விற்பனையாகி வியக்கவைத்த வீரர்கள்!!

By karthikeyan VFirst Published Dec 19, 2018, 2:19 PM IST
Highlights

மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், மனோஜ் திவாரி உள்ளிட்ட பல பிரபலமான வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அதேநேரத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் இல்லாத மற்றும் எதிர்பாராத வகையில் சில வீரர்கள் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். 
 

ஐபிஎல் 12வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது. அதற்கான ஐபிஎல் ஏலம் நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், மனோஜ் திவாரி உள்ளிட்ட பல பிரபலமான வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அதேநேரத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் இல்லாத மற்றும் எதிர்பாராத வகையில் சில வீரர்கள் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். 

அப்படி அதிக விலைக்கு ஏலம் போன வீரர்களை பார்ப்போம்.

1. வருண் சக்கரவர்த்தி - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் மதுரை பாந்தர்ஸ் அணியில் ஆடி, தனது மாயாஜால சுழற்பந்து வீச்சின் மூலம் கவனம் ஈர்த்தவர். 10 டி20 போட்டிகளில் ஆடி 4.7 என்ற மிரளவைக்கும் எகானமி ரேட்டை பெற்றவர். தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் கவனத்தை ஈர்த்ததன் மூலம் விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாட்டு அணியில் ஆடிய வருண், ரஞ்சி டிராபியிலும் தமிழ்நாட்டு அணிக்காக ஆடிவருகிறார். இவரை ரூ.8.4 கோடிக்கு பஞ்சாப் அணி எடுத்துள்ளது. இதுதான் இந்த சீசனில் ஒரு வீரருக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச தொகை. இதே தொகையில் ஜெய்தேவ் உனாத்கத்தை ராஜஸ்தான் அணி எடுத்தது. 

2. ஷிவம் துபே - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

மும்பையை சேர்ந்த ஷிவம் துபே, தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். பேட்டிங் ஆல்ரவுண்டரான ஷிவம், நல்ல ஃபார்மில் இருந்துவருகிறார். மேலும் உள்நாட்டு போட்டிகளிலும் மிகச்சிறப்பாக ஆடிவருகிறார். நல்ல ஃபார்மில் இருக்கும் ஆல்ரவுண்டரான ஷிவம் துபேவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ.5 கோடி கொடுத்து எடுத்துள்ளது. 

3. பிரப்சிம்ரன் சிங் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் ஆடிய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் பிரப்சிம்ரன் சிங். பஞ்சாப்பை சேர்ந்த இவரை ஏலத்தில் எடுப்பதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரூ.4.8 கோடிக்கு பஞ்சாப் அணி எடுத்தது. 

4. கோலின் இங்கிராம் - டெல்லி கேபிடள்ஸ்

தென்னாப்பிரிக்க வீரர் கோலின் இங்கிராமை ரூ.6.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடள்ஸ். இவர் டெல்லி அணிக்காக ஏற்கனவே மூன்றே மூன்று ஐபிஎல் போட்டிகளில் ஆடி வெறும் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் மற்ற லீக் போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 202 டி20 போட்டிகளில் ஆடிய அனுபவம் மிக்கவர். எனவே 33 வயதான இங்கிராமின் மீது நம்பிக்கை வைத்து அவரை ரூ.6.4 கோடிக்கு எடுத்துள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி. 

5. பிராத்வெயிட் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரான பிராத்வெயிட்டை சன்ரைசர்ஸ் அணி கழட்டிவிட்டது. சன்ரைசர்ஸால் கழட்டிவிடப்பட்ட அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.5 கோடிக்கு எடுத்தது. ஹெட்மயர், பூரான் போன்ற இளம் அதிரடி வீரர்கள் இந்த ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையாவார்கள் என்பது அறிந்ததே. ஆனால் பிராத்வெயிட்டை 5 கோடி ரூபாய்க்கு எடுத்தது பெரிய விஷயம் தான். 

6. மோஹித் சர்மா - சென்னை சூப்பர் கிங்ஸ்

வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா, ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடியவர். இவர் கடந்த சீசனில் பஞ்சாப் அணியில் ஆடினார். சென்னை அணியில் இருக்கும்போது வலைப்பயிற்சியில் தோனிக்கு அதிகமாக பந்துவீசிய அனுபவம் பெற்றிருந்ததால், தோனியின் பலவீனத்தை நன்கு அறிந்து, கடந்த சீசனில் தோனிக்கு கடைசிக்கட்ட ஓவர்களில் நெருக்கடி கொடுத்தார். எந்தவிதமான போட்டிக்கான இந்திய அணியிலும் இல்லாத மோஹித் சர்மாவை, எடுப்பதில் சென்னை அணி ஆர்வம் காட்டியது. இறுதியில் ரூ.5 கோடி கொடுத்து அவரை எடுத்தும் விட்டது. மோஹித் சர்மா இவ்வளவு தொகைக்கு எடுக்கப்படுவார் என்பது எதிர்பார்க்கப்படாத சம்பவம். 
 

click me!