
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஷாகித் அப்ரிதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததன் மூலம் அவருடைய 21 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி-20 போட்டியில் பெஷாவர் ஜல்மி அணிக்காக விளையாடி வரும் அவர், ஷார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் 28 பந்துகளில் 54 ஓட்டங்கள் குவித்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அப்ரிதி, "சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். அதேநேரத்தில் எனது ரசிகர்களுக்காக பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் இன்னும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவேன்' என்றார்.
சிக்ஸர்களை விளாசி எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு கிலியை ஏற்படுத்துவது என்பது அப்ரிதிக்கு கை வந்த கலை. அதனால் ரசிகர்களால் "பூம் பூம்' அப்ரிதி என அழைக்கப்பட்டார்.
1996-இல் அவர் தனது 2-ஆவது ஆட்டத்திலேயே இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் சதமடித்ததன் மூலம் கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்தார். அந்த சாதனை ஏறக்குறைய 18 ஆண்டுகள் முறியடிக்கப்படாமல் இருந்தது. அதை 2014-இல் நியூஸிலாந்தின் கோரே ஆண்டர்சன் (36 பந்துகளில்) முறியடித்தார். ஆண்டர்சன் சாதனையை தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 2015-ஆம் ஆண்டு முறியடித்தார்.
தலைசிறந்த ஆல்ரவுண்டரான அப்ரிதி, பேட்டிங்கால் மட்டுமல்ல, தனது லெக் ஸ்பின் பந்துவீச்சாலும் எதிரணியினரை திணறடித்தவர் ஆவார். 2009-இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் அப்ரிதி தனது அசத்தலான ஆட்டத்தால் பாகிஸ்தானுக்கு கோப்பையை வென்று தந்தார்.
2010-இல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அப்ரிதி, 2015 உலகக் கோப்பை போட்டியோடு ஒரு நாள் போட்டியில் இருந்தும் விடை பெற்றார். அவர் தலைமையிலான பாகிஸ்தான் அணி 2011 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு கேப்டன் பதவியை ராஜிநாமா செய்த அப்ரிதி, இப்போது சர்வதேச கிரிக்கெட்டுக்கும் பிரியா விடை கொடுத்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.