
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் முதல் இரண்டு போட்டிகளில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ள்ளது.
கோலி தலைமையிலான இந்திய அணியில் பாண்டியாவுக்கு பதிலான மாற்று வீரரை தேர்வுக் குழு குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கை:
"இந்திய அணி நிர்வாகத்துடனான கலந்தாலோசனைக்குப் பிறகு, இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அவருக்கான வேலைப் பளு அதிகரித்துள்ள நிலையில், அவருக்கு காயம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.
பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் குறிப்பிட்ட காலத்திற்கு பாண்டியா பயிற்சியில் இருப்பார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் பந்துவீசியபோது பாண்டியாவுக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. அப்போது வலியால் துடித்தபோதிலும், தொடர்ந்து ஓவர் வீசினார். அதன் காரணமாக அவருக்கு ஓய்வளிக்கப்பட்டு இருக்கலாம்.
பாண்டியா, ஜூன் மாதம் சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலிருந்து இதுவரை மூன்று டெஸ்ட், 22 ஒருநாள் ஆட்டங்கள், ஐந்து டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கோலிக்கு அடுத்தபடியாக, அவர் அதிக போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளார்.
இலங்கை அணி பெரும் பலம் வாய்ந்த அணியாக இல்லாத நிலையில், ஆல் ரவுண்டர்களின் தேவை ஏற்படாத காரணத்தால் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் போன்ற சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களின் துணையுடன் களம் காண இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.