
அபுதாபி,
பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்வியை தவிர்க்க, அடித்து ஆடினாலே முடியும்.
பாகிஸ்தான் – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 452 ஓட்டங்களும், வெஸ்ட் இண்டீஸ் அணி 224 ஓட்டங்களும் எடுத்தன. 228 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 3–வது நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 114 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அசார் அலி 52 ஓட்டங்களுடனும், ஆசாத் ஷபிக் 5 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
திங்கள்கிழமை 4–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய அசார் அலி 79 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து யூனிஸ்கான், ஆசாத் ஷபிக்குடன் இணைந்தார். மதிய உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 2–வது இன்னிங்சில் 67 ஓவர்களில் 227 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆசாத் ஷபிக் 58 ரன்னுடனும், யூனிஸ்கான் 29 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பின்னர் 456 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 2–வது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட ஜான்சன் 9 ஓட்டங்களிலும், அடுத்து வந்த டேரன் பிராவோ 13 ஓட்டங்களிலும், சாமுவேல்ஸ் 23 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர்.
நிலைத்து நின்று ஆடிய பிராத்வெய்ட் 67 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முகமது நவாஸ் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ.ஆனார்.
நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2–வது இன்னிங்சில் 62 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் எடுத்தது. பிளாக்வுட் 41 ஓட்டங்களுடனும், ரோஸ்டன் சேஸ் 17 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற மேலும் 285 ஓட்டங்கள் எடுக்க வேண்டும். அந்த அணி கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளது.
தோல்வியை தவிர்க்க மேற்கிந்தியத் தீவுகள் அணி கடுமையான ஆட்டத்தை ஆட வேண்டும். ஆனால், இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற சாதாரணமாக ஆடினாலே போதுமானதாக இருக்கும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.