தொடர்ந்து சொதப்பும் சீனியர் வீரர்கள்.. போட்டிக்கு போட்டி பொளந்து கட்டும் ஹனுமா விஹாரி

By karthikeyan VFirst Published Oct 25, 2018, 11:56 AM IST
Highlights

தியோதர் டிராபியில் இளம் வீரர் ஹனுமா விஹாரி அபாரமாக ஆடிவருகிறார். இந்தியா ஏ மற்றும் இந்தியா சி அணிகளை வீழ்த்தி தியோதர் டிராபியின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா பி அணி.
 

தியோதர் டிராபியில் இளம் வீரர் ஹனுமா விஹாரி அபாரமாக ஆடிவருகிறார். இந்தியா ஏ மற்றும் இந்தியா சி அணிகளை வீழ்த்தி தியோதர் டிராபியின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா பி அணி.

தியோதர் டிராபி தொடர் நடந்துவருகிறது. இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா ஏ, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா பி மற்றும் ரஹானே தலைமையிலான இந்தியா சி ஆகிய மூன்று அணிகளும் கலந்துகொண்டு ஆடிவருகின்றன. 

இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையேயான போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா பி அணி வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இந்தியா பி அணியின் ஹனுமா விஹாரி 87 ரன்களை குவித்திருந்தார். இந்தியா ஏ அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் இலக்கை விரட்டும்போது 99 ரன்கள் குவித்து ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். கடுமையாக போராடிய தினேஷ் கார்த்திக் 99 ரன்களிலும் அஷ்வின் அரைசதம் கடந்ததும் அவுட்டாகியதால் அந்த அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இதையடுத்து ரஹானே தலைமையிலான இந்தியா சி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா பி அணிகள் நேற்றைய போட்டியில் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா பி அணியின் ஹனுமா விஹாரி, இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்தார். ஹனுமா விஹாரி 76 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் இணைந்து சொற்பமான பங்களிப்பை அளிக்க அந்த அணி 50 ஓவர் முடிவில் 231 ரன்களை எடுத்தது. 

232 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்தியா சி அணியில் சீனியர் வீரர்களான ரஹானே, ரெய்னா ஆகியோரும் இளம் வீரர்களான ஷுப்மன் கில், இஷான் கிஷான், விஜய் சங்க, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் இருந்தனர். எனினும் யாருமே சோபிக்காததால் அந்த அணி வெறும் 201 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. அதனால் இந்தியா பி அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ரஹானே, ரெய்னா ஆகிய சீனியர் வீரர்கள் தியோதர் டிராபியில் கூட சரியாக ஆடுவதில்லை. 

இந்திய அணியில் ஆடிய ரஹானே, ரெய்னா ஆகியோர் மோசமான ஃபார்ம் காரணமாக அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ராயுடுவும் ரிஷப் பண்ட்டும் நிரந்தர இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மீண்டும் தங்களுக்கான இடத்தை பெற போராடாமல், தொடர்ந்து ரஹானே, ரெய்னா ஆகியோர் சொதப்பிவருகின்றனர். 

அதேநேரத்தில் இளம் வீரரான ஹனுமா விஹாரி தொடர்ந்து சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்துவருகிறார். சீராக ஆடி ரன்களை குவிப்பதால், ஹனுமா விஹாரிக்கு விரைவில் இந்திய அணியில் இடம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
 

click me!