வெற்றிப் பெற்றது ஹாமில்டன்; சாம்பியன் வென்றது ராஸ்பெர்க்…

First Published Nov 28, 2016, 12:12 PM IST
Highlights


புதாபி,

பார்முலா 1 கார்பந்தயத்தில் கடைசி சுற்றில் ஹாமில்டன் வெற்றிப் பெற்ற போதிலும் ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் ஜெர்மனியின் ராஸ்பெர்க் புதிய சாம்பியனானார்.

இந்த சீசனுக்கான பார்முலா-1 கார்பந்தயம் மொத்தம் 21 சுற்றுகளை கொண்டது. இதன் 21–வது மற்றும் கடைசி சுற்று போட்டியான அபுதாபி கிராண்ட்பிரி அங்குள்ள யாஸ் மரினா ஓடுதளத்தில் நேற்று நடந்தது.

வழக்கம் போல் 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். பந்தய தூரம் 305.355 கிலோ மீட்டர்ஆகும். இதில் முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 38 நிமிடம் 04.013 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்றதுடன் அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார்.

அவரை விட 0.439 வினாடி மட்டுமே பின்தங்கிய ஜெர்மனியின் நிகோ ராஸ்பெர்க் (மெர்சிடஸ் அணி) 2–வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார். முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 3–வது இடம் (15 புள்ளி) பிடித்தார்.

போர்ஸ் இந்தியா அணி வீரர்களான நிகோ ஹல்கென்பெர்க் (ஜெர்மனி), செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ) முறையே 7–வது மற்றும் 8–வது இடங்களை பெற்றனர்.

கடைசி சுற்றில் வெற்றிக்கனியை பறித்த போதிலும் அதனால் ஹாமில்டனுக்கு பலன் இல்லை. ஏனெனில் ஹாமில்டன் வெற்றி காணும் போது, அவரது எதிராளி ராஸ்பெர்க் 3–வது இடத்திற்கு கீழ் பின்தங்கினால் மட்டுமே ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வசப்படுத்த முடியும் என்று சூழல் இருந்தது. ஆனால் ஹாமில்டனின் எண்ணம் ஈடேறவில்லை.

21 சுற்றுகள் முடிவில் பட்டியலில் ஜெர்மனியின் ராஸ்பெர்க் மொத்தம் 385 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து, இந்த ஆண்டுக்கான பார்முலா1 உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை சொந்தமாக்கினார். அவர் இந்த பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

மயிரிழையில் 4–வது முறையாக மகுடம் சூடும் வாய்ப்பை நழுவ விட்ட ஹாமில்டன் 380 புள்ளிகளுடன் 2–வது இடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் டேனியல் ரிக்கார்டோ 256 புள்ளிகளுடன் 3–வது இடத்தையும், செபாஸ்டியன் வெட்டல் 212 புள்ளிகளுடன் 4–வது இடத்தையும் பெற்றனர். போர்ஸ் இந்தியா வீரர் செர்ஜியோ பெரேஸ் 101 புள்ளிகளுடன் 7–வது இடத்தை பெற்றார்.

tags
click me!