தம்பி நீ சின்ன பையன்.. இந்த வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத!! சீண்டிய பிராடுக்கு சிக்ஸரில் பதிலடி கொடுத்த தாதா

By karthikeyan VFirst Published Sep 11, 2018, 2:23 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை வம்பிழுக்க நினைத்து இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் வாங்கிக்கட்டிய சம்பவம் குறித்து பார்ப்போம். 
 

கிரிக்கெட்டில் எதிரணி வீரர்களை வம்புக்கு இழுத்தும் சீண்டியும் வீழ்த்த முனைவது ஒருவகையான களவியூகம். அது சில நேரங்களில் பலனளிக்கும். சில நேரங்களில் அதுவே வினையாக அமைந்துவிடும். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை வம்பிழுக்க நினைத்து இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் வாங்கிக்கட்டிய சம்பவம் குறித்து பார்ப்போம். 

கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணி 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. அந்த தொடரின் முதல் 5 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து அணி 3-2 என முன்னிலை வகித்தது. தொடரை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய நிலையில், 6வது ஒருநாள் போட்டியை ஆடியது இந்திய அணி.

6வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 50 ஓவர் முடிவில் 316 ரன்கள் எடுத்தது. 317 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகிய இருவரும் சிறப்பாக ஆடினர். நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

முதல் விக்கெட்டை எடுக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறினர். 9வது ஓவரை அப்போதைய இளம் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடிம் கொடுத்தார் இங்கிலாந்து கேப்டன் கோலிங்வுட். அந்த ஓவரை எதிர்கொண்ட சச்சின் டெண்டுல்கர், மூன்றாவது பந்தில் சிங்கிள் தட்டினார். நான்காவது பந்தை எதிர்கொண்ட கங்குலி, பவுண்டரி அனுப்பினார். அடுத்த இரண்டு பந்துகளிலும் ரன் எடுக்கவில்லை. 

உடனே கங்குலியை பார்த்து சில வார்த்தைகளை உதிர்த்தார் ஸ்டூவர்ட் பிராட். இதனால் ஆத்திரமடைந்த கங்குலி, கோபமாக பிராடுக்கு பதிலடி கொடுத்தார். பிறகு இருவரும் சமாதானப்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது வர்ணனை செய்த ஹர்ஷா போக்ளே, களத்தில் என்ன நடந்தது என்பதை விவரித்துக்கொண்டிருந்தார். அப்போது, இதெல்லாம் என்கிட்ட வச்சுகாத.. உன் வியூகம் என்னிடம் பலிக்காது என்று பிராடிற்கு பதிலடி கொடுத்திருக்கலாம் என்று போக்ளே தெரிவித்தார். 

இந்த சம்பவத்திற்கு பிறகு 11வது ஓவரை வீசிய பிராடின் பந்தில் சிக்ஸர் அடித்து பதிலடி கொடுத்தார் கங்குலி. அந்த போட்டியில் அரைசதம் கடந்த கங்குலி, பிராடின் பந்தில் பீட்டர்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். சச்சின் 94 ரன்கள் குவித்து அவுட்டானார். 49.4 ஓவரில் இலக்கை எட்டி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 
 

click me!