எல்லாத்த பத்தியும் பேசியே ஆகணும்னு அவசியம் இல்ல!! கடுப்பான கங்குலி

By karthikeyan VFirst Published Nov 15, 2018, 11:36 AM IST
Highlights

வெளிநாட்டு வீரர்களின் ஆட்டத்தை அதிகம் ரசிப்பதாக கூறிய ரசிகரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோலி கடுமையாக சாடியது குறித்து முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரும் சாதனைகளின் நாயகனுமான கோலி, பொறுமையும் நிதானமும் போதாவர். களத்தில் ஆக்ரோஷமாக இருப்பது சரி. ஆனால் பொதுவெளியிலும் பொறுமையில்லாமல் பேசுவது அவர் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்துகிறது. 

அதுமாதிரியான ஒரு சர்ச்சையில் அண்மையில் சிக்கினார் கோலி. ரசிகர் ஒருவரின் கேள்விக்கு விராட் கோலி அளித்த பதில் சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பாக அவர் பேசிய வீடியோவில், ஒரு ரசிகர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அதில், விராட் கோலி மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும், நல்ல எண்ணமும் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவரிடம் ஏதும் சிறப்பான பேட்டிங் திறமை இருப்பதாகத் தெரியவில்லை. நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசித்துப் பார்ப்பேன் என்று அந்த ரசிகர் தெரிவித்ததை சுட்டிக்காட்டினார் கோலி.

பின்னர் இதற்கு பதிலளித்த கோலி, என்னைப் பொறுத்தவரை இந்த கருத்தைக் கூறிய அந்த ரசிகர் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது சென்று வாழலாம். எதற்காக மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு நேசித்துக்கொண்டு இந்தியாவில் அந்த ரசிகர் வாழ வேண்டும்? நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை என்பதற்காகக் கவலைப்படவில்லை, அதனால் இப்படிப் பேசவில்லை. மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உங்களுடைய முன்னுரிமை எதுவென்று முடிவு செய்யுங்கள் என்று காட்டமாக கோலி பதிலளித்தார். 

ரசிகரின் கருத்துக்கு கோலி பதிலளித்த விதம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. சமூக வலைதளங்களில் கோலிக்கு கண்டனங்கள் குவிந்தன. கோலியின் நிதானமற்ற பதிலடியை பெரும்பாலானோர் ரசிக்கவில்லை.

இந்நிலையில், இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மறுத்த கங்குலி, இதுகுறித்து பதிலளிக்க விரும்பவில்லை. ஒவ்வொரு கருத்துக்கும் பதில் கருத்து அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டார். 
 

click me!